நாமலின் 10000 கட்டில்களும், வீரவன்சவின் அதிதீவிர சிகிச்சை கட்டில்களும் எங்கே? எம்.பி
14 Aug,2021
கொரோனா தாக்கத்தில் இந்தியாவை விட பயங்கரமான நிலையில் இலங்கை காணப்படுவதாகவும் நாமல் ராஜபக்ச கூறிய 10000 கட்டில்கள் எங்கே, விமல் வீரவன்ச கூறிய அதிதீவிர சிகிச்சை கட்டில்கள் எங்கே? என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிண்ணியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் தாக்கம் இன்று இலங்கையில் உச்சம் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் காணப்பட்டதை விட பயங்கரமான நிலையில் இலங்கை உள்ளது. வைத்தியசாலைகளில் இடமில்லை தீவிர சிகிச்சைப் பிரிவில் இடமில்லை நோயாளிகள் வைத்தியசாலை வளாகத்தில் தரையில் ஒட்ஸிசன் சிலிண்டருடன் உறங்கும் புகைப்படங்கள் தொடர்ச்சியாக காண கிடைக்கிறது.
ஆனால் நாமல் ராஜபக்ச அண்மையில் 10000 கட்டில்களை கையளித்ததாக கூறினார். விமல் வீரவன்ச அதி தீவிர சிகிசிச்சை கட்டில்களை தயாரித்ததாக கூறினார். நோயாளிகள் தரையில் உறங்கும் போது இவை எதனையும் காணவில்லை.
இறப்புக்களின் எண்ணிக்கை நாளாந்தம் நூற்றை தாண்டுகிறது ஆனால் அரசால் கூறப்படும் இறப்புக்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஜனாதிபதிக்கு பிழையான எண்ணிக்கை வழங்கும்போது இது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்.
இன்று பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மூன்று வேளையும் உண்ட மக்கள் ஒரு வேளை உண்ண முடியாமல் தவிக்கின்றனர். பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு.பால்மா இல்லை.இப்போது சமையல் எரிவாயுவும் இல்லை.
எரிவாயுவுக்காக மிக நீண்ட வரிசையில் சிலிண்டர்களுடன் பல மணி நேரம் வீதியில் காத்து கிடைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என்றார்.