ஆயிரக்கணக்கான தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவுக்கு படையெடுப்பு; பரபரப்பு தகவல்!
20 Jul,2021
கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், எதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கில் வெளி மாவட்ட மீனவர்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலிருந்து நாளாந்தம் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் படையெடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இதற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வினவியுள்ளார்.
முல்லைத்தீவு – கொக்குளாய் பகுதியிலிருந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்காக தென்னிலங்கை மீனவர்கள் செல்வதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் நேற்று கொக்குளாய் பகுதிக்குசென்று நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டனர்.
இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிமாவட்ட மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடி செயற்பாடுகளில் ஈடுபடுவதால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.