புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சித்தாராம்! கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட நகுலேசன்!
14 Jul,2021
விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு சிறிலங்கா சிஐடியினரிடம் பாரமளிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை சிறிலங்கா பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். பாக்கியதுரை நகுலேசன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் இவர் 2019 ஆம் ஆண்டு கட்டாருக்கு சென்றவர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர், விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், இவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது எனவும் கூறியுள்ளார்.
கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டு, கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த பின்னர், சிஐடியினரால் விசாணைக்கு பொறுப்பேற்கப்பட்டுள்ளார் என்றும் இவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்