ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றும் வேலை!
07 Jul,2021
தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை அரசாங்கம் உருவாக்கிய ஆணைக்குழுவே கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
“ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணமால் போயுள்ளனர் என்பதை அரசாங்கம் அமைத்த ஆணைக்குழுவே கூறியது. 20 ஆயிரம் பேர் காணமால் போனார்கள் என பரணகம ஆணைக்குழு கூறியது, உடலாகம ஆணைக்குழு, எல்.எல்.ஆர்.சி ஆணைக்குழு என்பனவும் கூறியுள்ளன. மஹிந்த ராஜபக்ச நியமித்த ஆணைக்குழுவே இதனைக் கூறியுள்ள நிலையில் இது குறித்து நீங்கள் கூறவருவது என்ன. பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்த மூவாயிரம் பேர் காணமால் போயுள்ளனர் என உங்களின் ஆணைக்குழுவே கூறியுள்ளது.
உங்களின் ஆணைக்குழுவே இதனை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவர்களின் ஒருவரைக்கூட கண்டறிய முடியாது போயுள்ளது என்றால் நீங்கள் பேசுவதில் அர்த்தம் உள்ளதா? இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணமால் ஆக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கம் அமைத்த ஆணைக்குழுவே தெரிவித்துள்ள நிலையில் அவர்களை கண்டறிய அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டம் என்ன? கொழும்பில் 11 இளைஞர்களை கடற்படையினர் கடத்தி கப்பம்பெற்ற சம்பவத்தில் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தனர். அவர்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது, இறுதியாக அந்த வழக்குகளுக்கு என்ன நடந்தது?
நீங்கள் தலையிட்டு வழக்குகளை மாற்றிவிட்டு இங்கு வந்து நியாயம் பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது. எனவே இந்த சட்ட திருத்தங்கள் அனைத்துமே ஐரோப்பாவை ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே.
இப்போதே காலம் கடந்துவிட்டது. உண்மையாக அரசாங்கம் நல்ல நோக்கத்தில் இவற்றை செய்யவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல முழு உலகமும் இதனை தெரிந்துகொள்ள வேண்டும்.
மனித உரிமை சட்டங்களை பின்பற்றும் உங்களின் செயற்பாடு உண்மையான ஒன்றல்ல. எனவே இந்த பொய்யான செயற்பாடுகள் வெற்றிபெறாது” என தெரிவித்துள்ளார்.