சர்வதேச அழுத்தங்களுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அகதி குடும்பத்தை அங்கிருந்து விடுவித்திருக்கிறது ஆஸ்திரேலிய அரசு.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்த குடும்பத்தினர் ஒன்றாக தங்க அனுமதிக்கப்படுவார்கள். அங்கிருந்தவாறு தங்களுக்கு முறையான குடியுரிமை வழங்கக் கோரி அவர்கள் நீதிமன்றத்திலும் வழக்காட முடியும்.
பில்லோவீலா குடும்பம் என்று அழைக்கப்படும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 4 வயது தாருணிகா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து பெர்த் நகருக்குக் கொண்டுவரப்பட்டார். அவருடன் தாய் பிரியாவும் வர அனுமதிக்கப்பட்டிருந்தது.
தாருணிகாவின் உடல்நிலை பாதிப்படைந்ததால், பில்லோவீலா குடும்பத்தினரைப் பற்றிய கவலை பொதுவெளியில் மீண்டும் அதிகரித்தது.
தாருணிகாவின் தந்தை நடேஸ், மூத்த மகள் கோபிகா ஆகியோரும் பெர்த் நகருக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக இந்த குடும்பத்தினர் தனித்தனியே இருக்க நேர்ந்தது.
இனி அவர்கள் பெர்த்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான "சமூக தடுப்பு முகாமில்" தங்க வைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் கண்காணிக்கப்பட்டாலும் சுதந்திரமாக நடமாட அனுமதி உண்டு.
முன்னதாக, அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்கள். சுற்றுச் சுவரைக் கொண்ட இந்த முகாமில் எப்போதும் காவலர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.
தீவில் இருந்தபோது, தாருணிகாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதாகவும் கிறிஸ்துமஸ் தீவில் சிகிச்சையளிக்கத் தாமதம் ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
நடேஸ் குடும்பத்தினரை விடுவிக்கக் கோரி மெல்போர்னில் போராட்டம் நடந்தது
கடந்த சில நாள்களாக நடேஸ் குடும்பம் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து அரசுக்கு எதிராக சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் அவர்கள் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், "இது விசா பெறுவதற்கான வழியை உருவாக்காது" என்று அமைச்சர் ஹாக் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அவர்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டிய அம்சங்கள் இல்லை என்றாலோ, அவர்கள் அகதிகள் இல்லை என்றாலோ அவர்களை நாங்கள் இலங்கைக்குச் சென்றுவிடுமாறு கூறுவோம்" என்றார் அவர்.
ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதில் நிலவும் சிக்கல்கள்
இந்தக் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர். நடேஸ் முருகப்பன், பிரியா மற்றும் குழந்தைகள் கோபிகா, தாருணிகா.
பிரியாவும் நடேஸும் இலங்கை உள்நாட்டுப் போருக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறியவர்கள். ஆஸ்திரேலியாவில் பிரியா மற்றும் நடேஸின் குடியேற்ற விண்ணப்பங்கள் பல ஆண்டு பரிசீலனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. அகதிகள் என்ற தகுதியைப் பெறுவதற்கான வரன்முறைகள் அவர்களுக்கு இல்லை என ஆஸ்திரேலிய அரசு கூறிவிட்டது.
அந்த அடிப்படையில் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற ஆஸ்திரேலிய அதிகாரிகள் இரண்டு முறை முயற்சி செய்தனர்.
முதலில் மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், சில நாள்களுக்குப் பிறகு இலங்கைக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றிவிடப்பட்டனர்.
அரசு அதிகாரிகள் நினைத்தபடி எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத நிகழ்வுகள் தொடங்கின.
ஆறாயிரம் பேர் வசிக்கும் பில்லோவீலா நகரத்தைச் சேர்ந்தவர்கள், நடேஸ் குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிராகக் கொந்தளித்தார்கள். ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
சமூக வலைதளங்களில் #HometoBilo என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பெரிய அளவிலான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அரசியல்வாதிகளிடம் ஆதரவு திரட்டப்பட்டது. நடேஸ் குடும்பத்துக்கு ஆதரவாக 3.5 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டன.
நடேஸ் குடும்பத்தினர் வெளியேற்றப்படுவதற்கு எதிராக வழக்கறிஞர்கள் இடைக்காலத் தடை பெற்றனர். அதனால் அவர்கள் மீண்டும் மெல்போர்ன் தடுப்பு முகாமுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். ஆனால் சட்டப் போராட்டத்தின் முடிவில் நடேஸ் குடும்பத்துக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது.
அதனால் 2019-ஆம் ஆண்டில் நடேஸ் குடும்பத்திடம் வந்த காவலர்கள் வெறும் இரண்டே மணி நேரத்தில் தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு புறப்படும்படிக் கூறினர். மீண்டும் இலங்கை விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
அப்போது வழக்கறிஞர்கள் மீண்டும் தடை உத்தரவு பெற்றனர். நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பியது. இந்த முறை குடும்பத்தினர் ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்குள் தங்க வைக்கப்படவில்லை. மாறாக சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.நடேஸ் குடும்பத்தின் விசா கோரிக்கை மறுபரிசீலனைக்கு உகந்தது என வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள். இளைய குழந்தையின் குடியேற்ற விண்ணப்பத்தைத் தனியாகப் பரிசீலனை செய்ய அரசு மறுப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். தாருணிகா ஆஸ்திரேலியாவில் பிறந்திருந்தாலும் அவரது பெற்றோர் படகுகள் மூலமாக நாட்டுக்குள் வந்தவர்கள் என்பதால், சட்டப்படி அவர்கள் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க முடியாது.
தாருணிகாவின் விண்ணப்பத்தை அனுமதிப்பது குறித்து வேறொரு நாளில் பரிசீலிக்கப் போவதாக அமைச்சர் ஹாக் கூறியுள்ளார்.