கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் நடைமுறைக்கு வருவது சீனாவுக்கு ஒரு வெற்றியாக கருதப்படலாம். ஏனென்றால் அது கொழும்பின் மத்தியில் இன்னொரு கேந்திர முக்கியத்துவ காலடியை பதிக்கிறது.
ஜனாதிபதி சி ஜின்பிங்கின் கீழ் சீனாவின் உலகளாவிய புகழைக் கட்டியெழுப்பும் பரந்த பின்னணியில் , அரசுக்குச் சொந்தமான சீன கனரக பொறியியல் கூட்டுத்தாபனம் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் வெற்றியைக் காட்சிப்படுத்த தயாராகியிருக்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகளில் ஒருவரான கேணல் ஹரிஹரன். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது
ராஜபக்சாக்கள் தங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் பாதுகாப்பு சபையில் இருந்து மாத்திரமல்ல, பொருளாதார நெருக்கடியில் இருந்தும் கூட மீட்டெடுப்பதற்கு சீனாவின் மீது தங்கியிருக்கும் போக்கு அதிகரித்துவருகின்றது.அதனால் நாட்டுக்கு பாதகமான முறையில் சீனாவுக்கு அனுகூலமான தீர்மானங்களை எடுப்பதன் மூலமாக அவர்கள் விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு முனனைய அரசாங்கம் இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்திருந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையை ராஜபக்சாக்கள் இரத்து செய்திருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் விசேடமாக குறிப்பிட்ட காரணம் நாட்டின் சுயாதிபத்தியமாகும்.
ஆனால் சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் பகிரங்கமாகவும் தீவிரமாகவும் உயர் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற துறைமுக நகரத் திட்டம் என்று வரும்போது அத்தகைய சுயாதிபத்தியத்தை குறிப்பாக காணமுடியவில்லை.அதே காரணங்களைக் காட்டி ராஜபக்சாக்கள் அமெரிக்காவின் மிலேனியம் சலஞச் கோர்ப்போரேசன் 480 மில்லியன் டொலர்கள் முதலீட்டு திட்டங்களை கைச்சாத்திடுவதற்கு மறுத்தார்கள்.
அத்தனைக்கும் அந்த திட்டங்களை கைச்சாத்திடும் யோசனையை முன்மொழிந்தது மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகக் கொண்ட முன்னைய நிருவாகமேயாகும்.
அமெரிக்காவும் இந்தியாவும் விவகாரங்களைக் கையாளும்போது இலங்கையின் இத்தகைய நடத்தையை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவுடனான அவற்றின் உறவுகளை மறுசீரமைத்துவரும் நிலையில், அவற்றின் எதிர்விளைவின் வெப்பத்துக்கு இலங்கை முகங்கொடுக்கவேண்டிவரலாம்.
இறுதியாக, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சீனா தாராளமாக நெருக்குதலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அக்கறைகள் தொடர்பில் இந்தியாவுக்கு அளித்த உத்தரவாதங்களை அவரால் எவ்வாறு உறுதியாக காப்பாற்றமுடியும்.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எம்.வி. எக்ஸ்பிரெஸ் பேர்ள் சரக்குக் கப்பல் இலங்கையின் மேற்குக் கரையோரமாக இரு வாரங்களாக எரிந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருந்த அதேவேளை இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச தீயணைப்பு படையினர் தீயணைத்துக்கொண்டிருந்த காட்சிகள் இன்றைய நிலைவரத்தை எமக்கு நினைவுபடுத்துகின்றன.அந்தக்கப்பல் 25 தொன்கள் நைத்திரிக் அமிலம் என்ற நச்சு இரசாயனத்தை ஏற்றிக்கொண்டுசென்றதை காலம் கடந்தே அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
2021 ஆம் வருடம் சீனாவில் எருது வருடமாகும்.ஜனாதிபதி சி ஜினபிங்(1953) போன்று சீனாவில் பாம்பு வருடத்தில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் நல்லது என்று கருதப்படுகிறது . மாவோ சேதுங்கும் பாம்பு வருடத்தில் பிறந்தவரே.இதுவரையில் இலங்கையில் நிலைவரங்கள் சீன ஜனாதிபதிக்கு அனுகூலமானதாகவே இருந்துவருகிறது.இலங்கையில் அவர் ஒரு வேட்டைக்கூட தீர்க்காமல் போரில் வெற்றியடைந்துகொண்டிருக்கிறார்.