இலங்கையில் வீடுகளிலும் வீதிகளில் உயிரிழக்கும் கோவிட் நோயாளிகள்
25 May,2021
இலங்கையில் வீடுகளில் நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவை தோல்வியடைந்தமை, சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கத் தவறியமையே கோவிட் வைரஸ் தொற்றினால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்பட காரணம் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாக கோவிட் நிமோனியா நிலைமை அதிகரித்து நோயாளிகள் வீடுகள், வீதிகள், வைத்தியசாலைகளில் அனுமதித்தவுடன் உயிரிழப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டியமை, அறிகுறிகள் உள்ள நோயாளிகளை தவற விட்டமை உட்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
இதனால் வேலைத்திட்டம் ஒன்றை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது சங்கத்தின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதியினால் முறையான வேலைத்திட்டம் தயாரிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்து 14 நாட்களாகிய போதிலும் ஜனாதிபதியின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
நோயாளிகள் வீதிகளில் உயிரிழக்கும் நிலையில் சுகாதார அமைச்சு கண்டுக்கொள்ளாமல் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.