பிரிட்டன் சர்வேந்திர சில்வாவை தடை செய்யுமா ?
09 May,2021
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரித்தானியாவிலுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடைசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தினை வலிறுத்தவேண்டும் என இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கான சர்வதேச மையம் (ICPPG) கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 12 ஏப்பிரல் 2021 அன்று, சர்வதேச சட்ட நிபுணரான யாஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கும் ITJP என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு சவேந்திரசில்வா தொடர்பில் 50 பக்க குற்றப்பத்திரிகை ஒன்றை தயார்செய்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிடம் கையளித்திருந்தது. அதன் அடிப்படையில், சவேந்திரசில்வா உள்ளிட்ட இலங்கைப் போர்க்குற்றவாளிகளை 06 யூலை 2020 அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான (Global Human Rights Regime) தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு 01 மே 2021 அன்று ICPPG இனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய அரசிற்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற பாரிய யுத்தக்குற்றங்கள் சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இடம்பெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் வெளியாகியிருப்பது மட்டுமன்றி, அவரின் கட்டளையின் கீழ் தற்போது செயற்படும் பாதுகாப்புப் படையினரால் இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதற்கான நம்பகமான ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் ICPPGயின் ஊடக பேச்சாளராகிய திருமதி. கிறிஸ்டி நிலானி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ICPPG யின் இளையோர் அணியின் தலைவரான செல்வி சுபதர்சா வரதராஜா அவர்கள் பேசுகையில், சவேந்திரசில்வாவை தடை செய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் தாங்கள் ஆரம்பித்துள்ளதாகவும், இந்த மனுவில் கையெழுத்திடுவதன் மூலம் அனைவரையும் தங்கள் ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.