11 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களை கொலை செய்திருக்க வேண்டுமா?
05 May,2021
வெளிநாட்டு டொலர்களுக்கும் பணத்திற்கும் அடிபணிந்து ஸ்ரீலங்கா இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயலை சரத்பொன்சேகா செய்து கொண்டிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றைய தினம் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மிருசுவில் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் விடுதலை தொடர்பில் கடந்த கூட்டத் தொடரில் சரத் பொன்சேகா கடுமையாக சாடியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி பேசிய சரத் வீரசேகர, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வெளிநாட்டிலுள்ள புலம்பெயர் தமிழர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு எமது நாட்டு இராணுவ வீரர்களை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது அவர் டொலர்களுக்காக வேலை செய்து கொண்டிருப்பதாகவும் சரத் வீரசேகர கடுமையாக சாடினார்.
இதேவேளை, 11 ஆயிரம் விடுதலை புலிகளை புனர்வாழ்வளித்து விடுவித்த சந்தர்ப்பத்தில், குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடைய நபர்களை விடுதலை செய்த போது எதிர்ப்பினை தெரிவிக்காத பொன்சேகா இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இந்த நிலையில், இதற்கு பதிலளித்த சரத்பொன்சேகா, சரத் வீரசேகர கூறுவதை பார்த்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 11 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களை கொலை செய்திருக்க வேண்டும் என்பதா? என்று கேள்வி எழுப்பினார்.