இலங்கையில் உருவாகும் சீன ஈழம் – தமிழர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை?
27 Apr,2021
சீன ஆதிக்கம் அதிகரிப்பதால் சர்வதேசத்தால் தமிழர் விடயம் பேசப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டை அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின் ஆதிக்கத்தால் தமிழர்களின் பிரச்சினை மீண்டும் சர்வதேசத்தால் கையில் எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சங்கானையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
216 ஹெக்ரெயர் பரப்பில் கடல் நிரவப்பட்டு நகர் ஒன்று உருவாக்கப்படுகின்றது. அதில் இலங்கைக்குச் சொந்தமானது 90 ஏக்கர் நிலம்தான். மிகுதி சீனாவுக்கே சொந்தம்.
அந்தப் பகுதிக்கு தனியான சட்டம் கொண்டுவருதற்கு முயன்றனர். நாடாளுமன்றம் கூடக் கேள்வி கேட்க முடியாதவாறு அந்தச் சட்டம் காணப்படுகின்றது என்று அறிய முடிகின்றது.
இந்தச் சட்டம் நிறைவேறினால் இலங்கையில் சீன வழி பூட்டப் பிள்ளைகள் உருவாகலாம். இந்த நிலைமை இந்தியாவுக்கு ஏற்றதாக இல்லை. மேற்கு நாடுகளுக்கும் ஏற்றதாக இல்லை. அதனால் தமிழ் மக்களின் பிரச்சினையைக் கருவியாக்கி மீண்டும் கையில் எடுக்கப்படும் சாத்தியங்கள் உண்டு.
தமிழ் மக்களை அரசு அரவணைத்துச் சென்றால் நாட்டை முன்னேற்ற முடியும். இவற்றை எல்லாம் உணராது நாட்டை அடகு வைக்க முயல்கின்றனர். இவற்றால் எழும் இன்னல்களுக்கு அரசு மட்டுமல்ல முழு நாடுமே விலை கொடுக்க நேரிடும் என்றார்.