இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இக் கருத்திற்கு மேலும் பதிலளித்துள்ள அவர்,
ஜனாதிபதியின் தப்பான சிந்தனையின் வெளிப்பாடே இதுவாகும். ஏதோ, இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தமிழர்கள் வந்தேறு குடிகள், எங்கிருந்தோ வந்த அவர்கள் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக வசிப்பதால் தமக்கென நாட்டின் ஒரு பகுதியைத் துண்டாடப் பார்க்கின்றார்கள் என்பதே அவரின் கருத்து.
ஆனால், உண்மை அதுவல்ல. இலங்கை நாடானது என்றுமே தமிழ்ப் பேசும் இடங்கள், சிங்களம் பேசும் இடங்கள் என்றே இருந்துவருகின்றது.
இப்பொழுதும் புகையிரத வண்டி மதவாச்சியைத் தாண்டியதும் தமிழர்கள் சற்று மிடுக்குடன் தமிழில் குரல் எழுப்பிப் பேசுவார்கள்.
அதுவரையில் பெட்டிப் பாம்பு போல் அடங்கி இருந்தவர்கள் இராணுவத்தினர் வண்டிக்குள் இருந்தால்கூட சற்றுக் குரலெழுப்பி தமிழில் பேசுவதைக் காணலாம். அதன்பொருள், தமிழ்பேசும் இடங்களை நோக்கி புகையிரதம் புறப்பட்டு விட்டது என்பதேயாகும்.
இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்லர். அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. இலங்கையைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணமும் வல்லரசுகளுக்கு இல்லை.
இதை கோட்டாபய ராஜபக்ஷ என்ற இளைப்பாறிய முன்னாள் இராணுவ அதிகாரி புரிந்துகொள்ள வேண்டும்.
வெறுமனே, பௌத்த பிக்குகள் சிலர் கூறும் தப்பான சரித்திரத்தை முன்வைத்து தப்பான முடிவுகளுக்கு அவர் வரக்கூடாது.
முழு நாட்டுக்கும், சகல மக்களுக்கும் தான் ஜனாதிபதி என்று கூறியவர் எவ்வாறு சிங்கள பௌத்த சிந்தனையில் இருந்து கொண்டு நாட்டைப் பாரபட்சமின்றி நிர்வகிக்கப் போகின்றார் என்பது முக்கியமான ஒரு கேள்வியாகும். அவரின் கூற்று தவறானது என்று தெரிவித்துள்ளார்.