நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட 12 ஆண்டுகளில் அவர்கள் நிகழ்த்திய அரசியல் மாற்றம் தான் என்ன? விரிவாகப் பார்ப்போம்...
“நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்றி திமுகவை அமர வைப்பது அல்ல. அடிப்படை அமைப்பு அரசியல் முறையை மாற்றுவதே உண்மையான மாற்றம்.” இது தேர்தல் பரப்புரையில் சீமான் முன்வைத்த முழக்கம். சரி, அவர் குறிப்பிடும் மாற்று அரசியல் என்பது என்ன? நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட 12 ஆண்டுகளில் அவர்கள் நிகழ்த்திய அரசியல் மாற்றம் தான் என்ன? விரிவாகப் பார்ப்போம்.
உறவு முறையில் அழைப்பது
சீமானும் சரி அவரின் தம்பி தங்கைகளும் சரி, அனைவரையும் உறவு முறை கொண்டு அழைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். முருகனை முப்பாட்டன் என்பதில் தொடங்கி, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை பெரிய தகப்பன் என்றும், தாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் அண்ணன் என்று குறிப்பிடும் முறையையே பின்பற்றுகின்றனர். அனைவரையும் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மாமா, அம்மா, அப்பா என்று உறவுமுறையிலேயே அழைத்துச் சொந்தங்களாகப் பழகுகின்றனர். இதில் சீமானை கூட அவர் கட்சியினர் அண்ணன் என்றே அழைக்கின்றனர். தலைவர் என்று அழைக்கும் பழக்கமே அவர்களிடத்தில் இல்லை. அப்படித் தவறிப் புதிதாக இணைந்தவர்கள் சீமானை தலைவர் என்று அழைத்தாலும், அவர் "நான் தலைவன் இல்லை. உங்கள் அண்ணன்." என்று அன்பாகத் திருத்துகிறார்.
பெண்களுக்குச் சம உரிமை
பெண்ணியம், சமூக நீதி பேசி ஆட்சியில் பல காலம் இருந்தாலும் இரண்டு திராவிடக் கட்சிகளும் பெண்களுக்கு அதிகாரத்தில் சம உரிமை கொடுத்ததே கிடையாது. இந்திய கட்சிகள் எதுவொன்றுமே இதுவரை சட்டமன்றத்திலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி பெண்களுக்குச் சம வாய்ப்பினை வழங்கியதே இல்லை. ஆனால், சீமான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 20-இல் பெண்களை நிறுத்தி முதல் முறையாகப் பெண்ணியப் புரட்சி செய்தார். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளில் சரி பாதி, அதாவது 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலே, இந்தியாவில் மட்டும் அல்ல, உலகத்திலேயே அதிகப் பெண்கள் களம் காணும் ஒரு நாட்டிற்கான தேர்தல் ஆகும். இப்பெருமையைத் தமிழ்நாடு பெற காரணமாக இருப்பது நாம் தமிழர் கட்சி தான்.
சாதி, மத வேறுபாடற்ற - தமிழன் என்ற ஓர்மை
ஆரியம் தமிழர்களைச் சாதியாகப் பிரித்து, பண்பாட்டைச் சிதைத்தது. அதற்குச் சற்றும் குறையாமல் திராவிடம் அதே சாதிய உணர்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடைந்து வருகிறது. அதுபோல, மத உணர்வைத் தூண்டி நாட்டையே இன்று கபளீகரம் செய்து வருகிறது பாசிச சக்திகள். இத்தகைய சமூகச் சூழலில், "மண்புழு கூட மனிதனுக்கு உதவும். சாதியும், மதமும் உதவாது", "சாதி, மத வெறி கொண்டவன் மனிதனாகவே இருக்க முடியாது" என்று மேடைதோறும் முழங்கும் சீமான், "சாதி, மதப் பற்றைத் துறந்து தமிழனாக உணர்ந்தால் மட்டுமே தமிழ் தேசியம் சாத்தியம்." என்கிறார். சாதியைச் சொல்லி வாக்கு சேகரிக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில், பொதுத் தொகுதிகளில் அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்ட ஆதித்தமிழ்க் குடிகளைத் தேடித்தேடி நிறுத்துகிறார். 2021 தேர்தலில், 16 பொதுத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழர்களை நிறுத்தியுள்ளார். சாதி மத வேறுபாட்டை மறந்து, தமிழன் என்ற ஓர்மை உணர்வைக் கொண்ட ஒரு பெரும் இளையோர்ப் படையைக் கட்டியிருக்கிறார் சீமான்.
மேடைப் பண்பாடு
நாம் தமிழர் முன்னெடுக்கும் அனைத்துக் கூட்டங்களிலும் மக்கள் அமரும் அமைப்பு எப்படி இருக்கிறதோ, அதே முறையில் தான் மேடையும் அமைக்கப்படுகிறது. மக்கள் அமரும் இடத்தில் கூரை இல்லையென்றால், மேடைக்கும் கூரை அமைக்கப்படாது. கொளுத்தும் வெய்யிலாக இருந்தாலும், கொட்டும் மழையாக இருந்தாலும் மேடையில் பேசும் சீமானும் சரி, அமர்ந்து கேட்கும் மக்களும் சரி, ஒரே நிலையில் உணர இதுபோன்ற ஒரு பண்பாட்டை உருவாக்கிப் பின்பற்றி வருகின்றனர். நிகழ்ச்சிகளில் மாலை போடுவது, சால்வை அணிவிப்பது போன்ற பண்பாடும் இங்கு இல்லை. சால்வை அணிவிப்பது சமூக நீதியின் வெளிப்பாடு என்று பேசுவோர் மத்தியில், ஒருவருக்குச் சால்வை அணிவித்தும் இன்னொருவருக்கு அணிவிக்காமல் இருப்பது எப்படிச் சமூக நீதி ஆகும் என்று கேள்வி எழுப்புகின்றனர் நாம் தமிழர் தம்பிகள். அது போக, சால்வை பெரிதாக எந்தப் பயன்பாட்டிற்கும் உரியதாக இல்லை. பரிசு வழங்க வேண்டும் என்று எண்ணினால், நூல்கள் கொடுப்பதை வழமையாகக் கொண்டுள்ளனர் அக்கட்சியினர். கட்சித் தலைவரின் புகழ் பாடுவதும் மேடைப் பண்பாட்டில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி மேடைகளில் கட்சித் தலைவர் புகழ் பாடுவதோ, வாழ்க - ஒழிக கோசம் போடுவதையோ காண முடிவதில்லை.
மது வாடையற்ற கூட்டங்கள்
அரசியல் கட்சி என்றாலே, அவர்கள் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க மது, கறிசோறு தருவது இயல்பாகிவிட்டது. மது வாடை வீசாத அரசியல் கட்சி கூட்டங்களே கிடையாது என்ற நிலையையில், அதற்கு நேர்மாறாக இவையேதும் இல்லாமல் கருத்தியல் புரட்சியை விதைக்கும் களமாக அரசியல் கூட்டங்களை மீண்டும் நிறுவி காட்டியுள்ளது நாம் தமிழர் கட்சி.
புத்தக அரங்குகள்
புத்தகங்கள்
கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்றும், துண்டுச் சீட்டு வைத்துக் கொண்டு பார்த்துப் படிக்கும் போதே பல பிழைகளுடன் படிக்கும் கட்சித் தலைவர்களுக்கு மத்தியில், எந்தக் குறிப்பும் இல்லாமல், மணிக்கணக்கில் பேசுகிறார் சீமான். தன் பேச்சுக்களில் பல்வேறு உலக அறிஞர்கள் கூறிய பொன்மொழிகளை எடுத்தாள்வது சீமானுக்குக் கைவந்த கலை. இதற்காக அவர் நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்துக் கொண்டே இருக்கிறார். "வாசிப்பதை சுவாசிப்பதை போல ஆக்கிக் கொள்ளுங்கள்" என்று புத்தகம் படிக்கும் பழக்கத்தை இளைய சமுதாயத்திடம் விதைக்கிறார் சீமான். இவர் படித்ததில் சிறந்த புத்தகங்களைத் தன் தம்பி தங்கைகளுக்கு மேடைதோறும் பரிந்துரையும் செய்கிறார். இதுபோன்ற ஒரு பழக்கத்தை இங்கு வேறு எந்தத் தலைவரிடமும் பார்க்க முடிவதில்லை. கட்சிக் கூட்டங்களில் கட்டாயம் புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து பெருமளவு புத்தகங்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.
முன்னோர் நினைவைப் போற்றுவது
அதுவரை தமிழகத்தில் இருந்த கட்சிகள், தன் கட்சியின் தலைவர்களுக்கு மட்டுமே பிறந்த நாளிலும், நினைவு நாள்களிலும் மரியாதை செலுத்தும் மரபை மாற்றித் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும், மண்ணுக்காகவும் போராடிய பெருந்தமிழர்களின் நினைவு நாட்களில் அவர்கள் நினைவைப் போற்றும் வகையில் அவர்கள் திருவுருவப் படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்துவது, தமிழ்நாடு முழுக்கச் சுவரொட்டிகள் ஓட்டுவது என்று மற்ற எந்தக் கட்சிகளும் இதுவரை செய்யாத முன்னெடுப்பைச் செய்திருக்கிறது நாம் தமிழர் கட்சி! அதுவரை சாதியத் தலைவர்களாக அடையாளப்படுத்தபட்டு, ஒரு வட்டதிற்குள் அடைக்கப்பட்டவர்களை அவர்கள் சாதியத் தலைவர்கள் இல்லை, தமிழ் தேசிய இனத்தின் தலைவர்கள் என்று சாதிவேறுபாடு கருதாது தமிழ் இளைஞர்கள் அனைவராலும் போற்றச்செய்தவர்.
சுற்றுச்சூழல் பாசறை
இயற்கை ஆர்வலர்கள் மட்டுமே சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகளைச் செய்துகொண்டிருந்த நிலையை மாற்றி இந்தியாவிலேயே முதன்முதலில் ஒரு கட்சியில் சுற்றுச்சூழல் பாசறை என்று ஒரு பாசறை அமைத்து பல சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகளைச் செய்தது நாம் தமிழர் கட்சி. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளைத் தூர்வாரித் தூய்மைப் படுத்தியுள்ளனர். வெறும் வார்த்தைகளோடு நிற்காமல் பல இலட்சக்கணக்கான பனை விதைகளைத் தமிழகம் முழுதும் விதைத்ததோடு, 2016-லேயே நெகிழிக்கு முற்றிலுமாகத் தடை விதிப்போம் என அறிவித்து, நீர்வழித்தடங்களை அடைத்திருந்த நெகிழிகுப்பைகளை அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டது. பின்னாளில் நெகிழிக்குப் பகுதியாகத் தமிழக அரசு விதித்த தடைக்கு வித்திட்டக் கட்சி நாம் தமிழர். வேடந்தாங்கல் பறவைகள் சராணலயத்தை நீதிமன்றம் வரை சென்று காத்தது. மண்ணில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்காது அதில் வாழும் ஓர் உயிரினமான மனிதனை மட்டும் காக்கும் அரசியல் பேசிப்பயனில்லை என்பதை உள்ளார்ந்து உணர்ந்து சூழலியலை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளது நாம் தமிழரின் சுற்றுச்சூழல் பாசறை.
பண்பாட்டுப் புரட்சி
பண்டைய தொல்தமிழர் பின்பற்றி இடையில் நாம் தொலைத்துவிட்ட தொன்ம பண்பாட்டு விழுமியங்களை மீளப்பெறவும், மண்ணின் மகத்தான மரபுக்கூறுகளை மீட்டுருவாக்கம் செய்யவும் வீரத்தமிழர் முன்னணி என்ற பண்பாட்டுப் பாசறை அமைத்துச் செயல்படுகிறது நாம் தமிழர் கட்சி. எந்த மதமாக, எந்தச் சாதியாக இன்று பிரிந்துப் பிளந்து கிடந்தாலும், நாம் எல்லாம் இயற்கையை வழிபட்ட, முன்னோர்களை வழிபட்ட ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உண்மையை உலகத்தமிழ் இனத்திற்கு உணர்த்த உருவெடுத்த பண்பாட்டு அமைப்புதான் வீரத்தமிழர் முன்னணி.
தமிழ் மீட்சிப் பாசறை
தமிழ் ஆட்சி மொழியாக இல்லை, அதிகார மொழியாக இல்லை, வழக்காடு மொழியாக இல்லை, வழிபாட்டு மொழியாக இல்லை என்பதை மாற்ற பாசறை அமைத்துக் களத்தில் இறங்கிப் போரிடுகிறது நாம் தமிழர் கட்சி. கட்சியினரின் பிள்ளைகள் முதல் கடைக்கு வைக்கும் பெயற்பலகைகள் வரை வாகன எண்கள் முதல், வாசிக்கும் சொற்கள் வரை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்தில் மட்டுமல்லாமல் வழக்கத்திலும் கொண்டுவந்துள்ளனர்.
இவை தவிரக் குருதி கொடுக்க ஒரு பாசறை, ஊழல் ஓழிக்க ஒரு பாசறை, பேரிடர் மீட்புக்கு ஒரு பாசறை, மாற்றுத்திறனாளிகள் பாசறை என்று பாசறை பல அமைத்து நல்ல அரசியலுக்கான தலைவாசலாக மாறியுள்ளது நாம் தமிழர் கட்சி.
தேர்தல் அறிக்கை இல்லை, ஆட்சி வரைவு தான்
அனைத்துக் கட்சிகளும் மக்களின் வாக்குகளைக் கவர ஒவ்வொரு தேர்தலுக்கும் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களோடு தேர்தல் அறிக்கை வெளியிடுவது வாடிக்கை. ஆனால், நாம் தமிழர் கட்சி அவர்கள் முதலில் போட்டியிட்ட 2016 தேர்தலிலேயே தேர்தல் அறிக்கையைத் தவிர்த்து, ஆட்சி எவ்வாறு நடத்துவோம் என்பதற்கான வரைவை வெளியிட்டனர். இதில் ஒவ்வொரு துறையும் எப்படிச் செயல்படும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி, தொகுத்து வெளியிட்டனர்.
"மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்." என்று அவர்கள் முன்வைக்கும் முழக்கத்திற்கேற்ப உண்மையில் இந்த அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு புதியதொரு அரசியல் பண்பாட்டையே உருவாக்கிப் புரட்சி செய்துள்ளது என்று கூறினால் அது மிகை ஆகாது!