இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக, பாரபட்சமற்ற முறையில், நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தும் தீர்மானம், ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில், நேற்று நிறைவேறியது. இந்த ஓட்டெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின், 46வது கூட்டம், நேற்று நடந்தது. அப்போது, இலங்கையில், அனைத்து மக்களின் நல்லிணக்கத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அரசை பொறுப்பேற்க செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது, ஓட்டெடுப்பு நடந்தது.
வலியுறுத்தல்
இதில், 47 உறுப்பு நாடுகளில், 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராக வும் ஓட்டுப்போட்டன. இந்தியா உள்ளிட்ட, 14 நாடுகள், ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரிட்டன், கனடா உள்ளிட்ட, ஆறு நாடுகள் தாக்கல் செய்த இந்த தீர்மானத்தை, இலங்கை அரசு, துவக்க நிலையிலேயே எதிர்த்தது.நேற்று, தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர், முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என, கோரிக்கை வைத்தனர்.
இந்த தீர்மானத்தில், 'இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, பாரபட்சமற்ற முறையில், நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னடைவு
மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறியோர் மற்றும் அனைத்து விதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும் வழக்கு பதிவு செய்து, தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களும், தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளன. இலங்கை ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும், 2009ல் நடந்த இறுதிப் போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க் குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஏற்கனவே, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில், மூன்று தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு, தோல்வி அடைந்தன.இந்நிலையில், தற்போது தீர்மானம் நிறைவேறியிருப்பது, இலங்கை அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தியா வலியுறுத்தல்
ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில், இந்திய துாதரக குழுவின் முதன்மை செயலர் பவன்குமார் பதே பேசியதாவது:இலங்கை தமிழர்கள் அமைதியாக, சமத்துவத்துடன், கண்ணியத்துடன் வாழ வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.மேலும், பிராந்திய ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, ஸ்திரத்தன்மையை இலங்கை அரசு பராமரிக்க வேண்டும். இந்த இரு முக்கிய அம்சங்களையும், இந்தியா ஆதரிக்கிறது. அத்துடன், இலங்கையில் அதிகாரப் பகிர்வு, மாகாண தேர்தல் நடத்துவது ஆகியவை தொடர்பாக, அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்ற, சர்வதேச சமூகத்தின் குரலுக்கும், இந்தியா ஆதரவளிக்கும். அதே சமயம், இலங்கை சார்ந்த, ஐ.நா., பொதுச் சபை தீர்மானங்களின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணையர் செயல்படுவார் என, இந்தியா நம்புகிறது.இவ்வாறு அவர் பேசினார்.