இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரம்- கொழும்பு ஊடகம்
18 Mar,2021
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது, ஜெனீவா விடயத்தில் இலங்கைக்கு பெரும் சவாலாக உள்ளதென அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் இலங்கைக்கு ஒரு சவாலான காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களுக்காக நாட்டை கேள்விக்கு உட்படுத்தும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற மேற்கத்தேய நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன எனவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் உரைக்குப் பதிலுரையாக அமைந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கை சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பினை நோக்கிச் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென கூட்டு நாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைக்கு எதிராகவும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வித பயங்காரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடுகின்றது என்பதை குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கை தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் திங்களன்று வாக்கெடுப்புக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு 47 உறுப்பு நாடுகள் வாக்களிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.