சர்வதேசத்தை புறந்தள்ளி செயற்பட்டால் பேராபத்து ஏற்படும் – எச்சரிக்கும் சம்பந்தன்
11 Mar,2021
!
இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதும் எமது வேண்டுகோளாகும்.
இதை நாம், 2009இல் போர் நிறைவுக்கு வந்தது தொடக்கம் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்களும் இதையே வலியுறுத்தி நிற்கின்றன. ஆனால், அரசுதான் ஐ.நாவின் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது.
இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அவர்களும், அரச தரப்பினரும் அது தொடர்பான விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்குப் பரிகாரம் கிடைக்க வேண்டும். இதுதான் சர்வதேச நியதி. இதை மீறி எவரும் செயற்பட முடியாது. சர்வதேசத்தைப் புறந்தள்ளி இந்த அரசு செயற்படுமானால் நாடுதான் பேராபத்தைச் சந்திக்கும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.