தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறிமுறையினை ஐ.நா.வில் சிபாரிசு செய்யவேண்டும்- சுரேஸ்
09 Mar,2021
தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையொன்றினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிபாரிசு செய்யவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகள், தங்கள் நாடுகளின் நலனை மாத்திரம் முன்னிறுத்தி செயற்படாமல் இலங்கையிலுள்ள தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையொன்றினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிபாரிசு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு அநீதிகளுக்கு எதிராக, சர்வதேசத்தின் நீதியை கோரி மட்டக்களப்பு- மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் ஏழாவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அன்னை பூபதி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான போராட்டம், ஏழாவது நாளாகவும் இன்றும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றைய போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் நகுலேஸ் மற்றும் ஊடக செயலாளர் சாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.