வரலாற்றில் முதல் தடவையாக ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஒன்றுதிரண்ட இந்திய நீதிபதிகள்
08 Mar,2021
ஈழத்தமிழர்கள் தொடர்பில் வரலாற்றில் முதல்தடவையாக இந்தியாவின் தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்துக்கு இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக் கோி கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்படி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையமும், அதன் அங்கத்துவ நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. பொதுச்செயலாளர், மனித உரிமை ஆணையாளர் உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இவர்கள் தமது மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்படி 5 அவசர கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியாவின் தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளான நீதிபதி K.P சிவசுப்பிரமணியம், நீதிபதி A.K ராஜன் ,நீதிபதி அரிபரந்தாமன், நீதிபதி அக்பர் அலி, நீதிபதி C.T செல்வம் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுமே இந்த மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் நீதிபதிகளின் இந்த நடவடிக்கை புதிய நம்பிக்கையினை தரும் என்று அனைத்துலக நீதிக்கான தளங்களில் பணியாற்றும் இவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் அனுப்பிவைத்துள்ள மனுவில் பின்வரும் 5 கோரிக்கைகள் உள்ளடங்கியுள்ளன.அவை வருமாறு
சிறீலங்கா அரசினை ஐ.நா பாதுகாப்புச் சபை ஊடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
சிறீலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத்தில் மீண்டும் பாரிய அழிவுகள் ஏற்படா வண்ணம் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வழங்கவேண்டும்.
தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு குறித்தும், ஐ.நா மனித உரிமைகள் சபை அறிக்கைகளினை தயாரித்து பன்னாட்டு அரசியல் தளங்கள் மற்றும் பன்னாட்டு நீதிமன்றங்களில் கையளிக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் பிரிவு 4 இன் கீழ் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஒருவரினை நியமிக்க வேண்டும்.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறப்பு கூட்டத்தொடர் ஒன்றினை நடாத்த வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளே அவையாகும்.