வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இறுதிசெய்து, அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கிடையில், தமிழக அரசியல், மக்கள் நீதி மய்யம், தி.மு.க. மீதான கோபம், தனது இலங்கைப் பயணம் ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் கே. முரளிதரனிடம் பகிர்ந்துகொண்டார் சீமான். பேட்டியிலிருந்து:
கே. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க, நா.த.க. என நான்கைந்து அணிகளாகத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. தேர்தல் முடிவில் நாம் தமிழர் கட்சி எந்த இடத்தில் இருக்கும்?
ப. நான் சுற்றியிருப்பவர்களையெல்லாம் கவனிக்கும் ஆள் அல்ல. நாங்கள் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக இந்த அரசியல் பணியை, கட்சியைத் துவங்கினோம். அதில் எங்கள் கொள்கை உறுதிப்பாட்டோடு பயணித்துக்கொண்டிருக்கிறோம். தொடர்ந்து தனித்துப்போட்டியிடும் அரசியல் கட்சியென்றால் அது நாம் தமிழர் கட்சிதான். மக்கள் நீதி மய்யம்கூட ஒரு கூட்டணி அமைக்கிறது. கருத்துக் கணிப்புகளில் அவர்கள் மூன்றாவது இடத்திற்கு வருவோம் என்கிறார்கள். நாங்கள் முதலிடத்திற்கு வருவதற்குப் போராடுவோம். கடுமையாக உழைப்போம். மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பாகவே வேட்பாளர்களை இறக்கிவிட்டிருப்பது அதற்காகத்தான். எங்களுக்கு ஊடக ஆதரவும் இல்லை. பொருளாதார வலிமையும் இல்லை. தவிர்க்க முடியாத மிகச் சிறந்த இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வரும்.
கே. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்கிறீர்கள். தமிழக அரசியலில் கவர்ச்சிகர தலைவர்களே இல்லை; ஆகவே கொள்கையின் அடிப்படையிலான தேர்தலாக இந்தத் தேர்தல் மாறியிருப்பதாகச் சொல்லலாமா?
ப. நாங்கள்தான் கொள்கையை வைக்கிறோம். ஆள் மாறி ஒன்றும் ஆகப்போவதில்லை. அமைப்பு மாற்றம்தான் தேவை. ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லையென்றாலும் அதே கட்சிகள் அப்படியே இருக்கின்றன. அந்தக் கட்சிகளுக்கு என்ன கொள்கை இருந்தது இதற்கு முன்பாக? அந்த ஆட்சிகள் எப்படி இருந்தது என்பது நமக்குத் தெரியும்.
விளக்கமாகச் சொல்கிறேன். காங்கிரசிற்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் எந்தக் கொள்கையில் வித்தியாசம் இருக்கிறது? அவர்கள் பாபர் மசூதியை இடிப்பார்கள். இவர்கள் இடிக்க அனுமதிப்பார்கள். அவர்கள் அடிக்கல் நாட்டுவார்கள். இவர்கள் வாழ்த்து சொல்வார்கள். ஏதாவது ஒரு இடத்தில் மாறுதல் உண்டா? புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் ஏற்கிறதா, இல்லையா?
தமிழ்நாட்டிற்கு வந்தால் திராவிடம். திராவிடம் என்றால் என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. ஒருவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது என்கிறார். ஒருவர் சாதி உணர்வு இல்லாததுதான் திராவிடம் என்கிறார். இன்னும் இவர்கள் தத்துவ முடிவுக்கே வரவில்லை. அப்படியிருக்கும்போது ஒரு திராவிடக் கட்சிக்கு மாற்றாக இன்னொரு திராவிடக் கட்சி எப்படி இருக்க முடியும்?
அ.தி.மு.கவிற்கும் தி.மு.கவிற்கும் இடையில் கொள்கையில் மாற்றமில்லை; கொடியில்தான் மாற்றம் இருக்கிறது. இங்கேயும் ஊழல், அங்கேயும் ஊழல். ஆகவே இந்திய, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்பது தமிழ் தேசியம்தான். என் தேசம் தமிழ் தேசம். என் தேசத்தின் கலை, பண்பாட்டை பாதுகாப்பது, அனைவருக்கும் கல்வி, எல்லோருக்கும் வீடு - இந்தக் கொள்கைகளுக்கெல்லாம் ஒரு அரசியல் இருக்கிறது. அதுதான் தமிழ் தேசிய அரசியல்.
கே. நீங்கள் சொல்லும் குறைகளுக்கு மாற்றாக எதை முன்வைக்கிறீர்கள்?
ப. இயன்றவரை தற்சார்பை முன்வைக்கிறோம். ராணுவத் தளவாடங்களை வெளிநாடுகளில் வாங்கலாம். எல்லாவற்றையும் வெளிநாடுகளில் வாங்கி யாருடன் சண்டை போடப்போகிறோம்? வேளாண்மையை கைவிட்ட நாடுகள் எல்லாம் பிச்சை எடுக்கின்றன. விளைநிலங்களை பறித்து தொழிற்சாலைகளை அதிகரித்தால் சாப்பாட்டிற்கு எங்கே செல்வது? குழந்தைகள் பட்டினி கிடக்கும்போது வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறீர்கள்.
குஜராத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் மூன்றாவது மாடியில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் கீழே நின்றபடி தண்ணீரைப் பீச்சியடிக்கிறார்கள். மூன்றாவது மாடி உயரத்திற்கு ஒரு ஏணி வாங்க உங்களால் முடியவில்லையா? மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தீர்களே, ஒரு முப்பதாயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியாதா?
கொரோனாவுக்காக பிரதமருக்கான நிவாரண நிதி எவ்வளவு வந்தது, அதில் எவ்வளவு வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டன? அதைச் சொல்ல வேண்டுமா, இல்லையா? ஆனாலும் நீங்கள் சிறந்த ஆட்சியாளர்கள் சொல்லிக்கொள்கிறீர்கள்.
சீமான்
மக்கள் நீதி மய்யத்தால் நா.த.கவின் வாக்குகள் குறையுமா?
கே. தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி குறித்து உங்களுடைய மதிப்பீடு என்ன?
ப. மதிப்பிடும் அளவுக்கு என்ன இருக்கிறது? எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அதோடுதான் பொருத்திப் பார்ப்பேன். அதோடு ஒப்பிட்டால் ஒன்றுமேயில்லை. கல்வி, மருத்துவம், தண்ணீர் விற்பனைக்கு வந்துவிட்ட தேசம் என்பது, நாடல்ல, நரகம்.
கே. 2016ல் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 1.07 சதவீதம். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றாலும், மக்கள் நீதி மய்யமும் பெருமளவு வாக்குகளைப் பெற்றிருந்தது. அக்கட்சி இந்த முறை வேறு சில கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டு களமிறங்குகிறது. ஆகவே, அடுத்தடுத்த தேர்தல்களில் உங்களுடைய வாக்கு வங்கி குறைகிறதா? அந்த வாக்குகள் வேறு கட்சிகளுக்குச் செல்கின்றனவா?
ப. அப்படி நினைக்கவில்லை. கமலுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள், எனக்கு வாக்களிக்கப் போவதில்லை. எனக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் கமலுக்கு வாக்களிக்கப் போவதில்லை. வாக்குகளைப் பிரித்துவிடுவார் என்பதெல்லாம் சும்மா. அப்படியெல்லாம் செய்துவிட முடியாது. இது ஒரு வெற்றுக் கேள்வி. என்னுடைய கருத்துகள் பிடித்து, எனக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். நாங்கள் முன்பைவிட அதிக கவனத்தைப் பெறுகிறோம் எனும்போது, அது வளர்ச்சிதான்.
கே. அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் மாற்றாக நீங்கள் உங்களை முன்னிறுத்திய நிலையில், தற்போது மற்றொரு கட்சியும் வந்திருக்கிறது...
ப. இல்லை. நீங்கள் எதை முன்வைக்கிறீர்கள் என்பது முக்கியம். மாற்று என்றால் இந்தக் கட்சிகளோடு சேராமல் இருக்க வேண்டும். கமல் ஐ.ஜே.கேவோடு கூட்டணி வைக்கிறார். அவர்கள் இரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்த கட்சி. சரத்குமார் கட்சியும் அப்படித்தான். நான் தொடக்கத்திலிருந்தே அந்த நிழலே படாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் கட்சிகளில் இருந்து மாற்று ஆட்சியைத் தருவேன் என்று சொல்விட்டு, அவர்களுடனேயே கூட்டணி சேர்ந்தால் அது ஏமாற்று வேலையாகிவிடும். அதைச் செய்ய மாட்டேன். ஆகவே மக்கள் நீதி மய்யத்தால் எனக்குப் பாதிப்பில்லை. யார் வாக்கையும் யாரும் பிரிக்க முடியாது.
கே. தமிழ்நாட்டை தமிழர் ஆள்வது என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைக்கிறீர்கள். இந்தத் தேர்தலிலும் இந்த முழக்கம் முக்கியமான ஒன்றாக இருக்குமா?
ப. இந்த முழக்கத்தை நான் முன்வைக்கவில்லை. என் முன்னோர்கள் முன்வைத்தார்கள். அது ஒன்றும் தீண்டத்தகாத முழக்கமல்ல. நாங்கள் பேசுவது இனவெறி அரசியல் அல்ல. இன உரிமை அரசியல். இதைக் குழப்பிக்கொள்கிறார்கள்.
கே. தொடர்ந்து தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வருகிறீர்கள். உங்களோடு ஒத்துச்செல்லக்கூடிய, உங்களைப் போன்ற சித்தாந்தம் கொண்ட கட்சிகள் இல்லையென நினைக்கிறீர்களா அல்லது கூட்டணியே கூடாதென முடிவுசெய்திருக்கிறீர்களா?
ப. அப்படியில்லை. நான் ஒரு கொள்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறேன். கூட்டணிக்கு வருகிறவர்கள், எவ்வளவு இடங்களைக் கொடுப்பார்கள், காசு கொடுப்பார்கள் என்று பார்க்கிறார்கள். இம்மாதிரி சூழலில் பெரிய கட்சிகளோடு சேர்ந்தால், அவர்களே செலவைப் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால், நான் இங்கே பிச்சையெடுத்து வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஆகவே இங்கே வர யோசிப்பார்கள். நான் 10 - 12 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டால் என்னோடு சேர வருவார்கள். அப்போதுதான் பேச முடியும். இப்போது பேச முடியாது.
கே. ஆடு மேய்த்தல் அரசு வேலை என்றீர்கள்....
ப. அரசே ஒருங்கிணைந்த பண்ணைகளை வைத்து அதனைச் செய்யும் என்கிறேன். பாலின் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி. ஸ்மார்ட் சிடி இருக்கிறது; ஸ்மார்ட் கிராமம் இருக்கிறதா? இல்லை. கிராமங்கள் காலியாகி நகர்ப்புறங்கள் நிரம்பி வழிகின்றன. சிற்றூரின் பொருளாதாரத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு பால் வருகிறது. நீ ஏன் மாடு வளர்க்கவில்லை? மாடு வளர்ப்பது அவ்வளவு அவமானமா? கிருஷ்ண பரமாத்மா, இயேசு கிறிஸ்து செய்திருக்கிறார்கள். அவர்கள் கேவலமானவர்களா? முதலில் அதைத்தானே செய்தோம். இப்போது ஏன் செய்யக்கூடாது?
கே. இதை ஏன் அரசு செய்ய வேண்டும்?
ப. அரசு சாராயம் விற்கலாம். இதைச் செய்யக்கூடாதா? ஆடு, மாட்டுக்கு ஊசி போடும் கால்நடை மருத்துவர் அரசுப் பணியாளரா இல்லையா? ஊசி போடுபவர், அரசு ஊழியராக இருக்கலாம், ஆடு மாடு வளர்ப்பவர் அரசாங்க ஊழியராக இருக்கக்கூடாதா? உங்களுக்கு கஷ்டம்னா விடுங்க. நான் மேய்க்கிறேன். எப்படி மேய்க்கிறேன்னு பாருங்கள். வறுமையைப் போக்கனுமென்றால் நாட்டுக் கோழி வளருங்கள் என பில் கேட்ஸே சொல்கிறார். அதை இழிவாக எப்படிக் கருதுகிறீர்கள்?
ஆயிரம் ஏக்கரில் மாட்டுக்கான மேய்ச்சல் நிலத்தை உருவாக்க வேண்டும். 100 ஏக்கருக்கு 25 ஏக்கரில் குளத்தை உருவாக்க வேண்டும். கண்ணாடியில் கட்டப்பட்ட அறைகள். எல்லா இடங்களிலும் சிசிடிவி இருக்கும். ஜீப்பில் பயணிப்போம். மாடு போடும் சாணத்தை வாக்குவம் க்ளீனர் போன்ற கருவியை வைத்து உறிஞ்சி, இயற்கை உரக்கிடங்கில் சேர்ப்போம். இந்த உரக்கிடங்கு 100 ஏக்கரில் அமைக்கப்பட்டிருக்கும். இயற்கை உரம் தயாரித்ததுபோக, பயோ - கேஸும் தயாரிக்கப்படும். இங்கே படித்தவன், படிக்காதவன் எல்லோருக்கும் வேலை கிடைக்கும். எத்தனை ஆயிரம் லிட்டர் பால் வெளியே சென்றிருக்கிறது என்று கணக்கிட படித்தவன், அதைச் சந்தைப்படுத்த படித்தவன். மாட்டைப் பார்த்துக்கொள்ள, பாலைப் பீச்ச படித்தவன் தேவையில்லை. இதில் என் நிலம் கெடாது.
ஆயிரம் ஏக்கரில் தக்காளி போட்டால், அதிலிருந்து தக்காளிக் கூழ் செய்து ஏற்றுமதி செய்வேன். பிற நாடுகளின் தேவையை பூர்த்திசெய்வேன். இதையெல்லாம் செய்ய படித்தவர்கள் தேவை. இவற்றை பெட்டியில் அடுக்க படித்தவன் தேவையில்லை. படிக்காதவன் போதும். ஆகவே எல்லோருக்கும் வேலை.
நீங்கள் உழைப்பிலிருந்து வெளியேறிவிட்டீர்கள். ஒன்றரைக் கோடி வட இந்தியன் இங்கே வந்துவிட்டான். விரைவில் இந்த நிலத்தைப் பறிகொடுப்போம். இப்படித்தான் ஈழத்தைப் பறிகொடுத்தோம். ஏனென்றால் இந்த கட்டட வேலையை சிங்கப்பூரில் செய்தால் நல்லது என்றும் இங்கே செய்தால் அவமானமென்றும் நினைக்கிறார்கள்.
கே. யாருக்கு எங்கே கூடுதலான ஊதியம் கிடைக்கிறதோ அங்கே செல்கிறார்கள்...
ப. என்ன கூடுதல் ஊதியம் கிடைக்கிறது? அம்மா, அப்பா இல்லை அங்கே. கோவில், திருவிழா இல்லை. கல்வி, மருத்துவம், குடிநீரை இலவசமாகக் கொடுத்துவிட்டால் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் என்ன செலவிருக்கிறது? வருமானம் எங்கேயிருக்கிறது என்று தெரியாமல் சிந்தித்தால் எப்படி?
கே. வன்னியர் உள்ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசினீர்கள். இதனால் பிற சமூகங்கள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப. இதனை வன்னியருக்கான இட ஒதுக்கீடு என்று நான் பார்க்கவில்லை. நாங்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக ஆதரிப்பவர்கள். இதற்கு நீண்ட காலமாக எங்க ஐயா போராடிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதுபோல வகுப்புவாரி கணக்கெடுங்கள்.
கே. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் 10.5 சதவிகிதம் கொடுத்தது சரியல்ல என்கிறார்களே?
ப. கணக்கெடுப்பு நடத்தாமல் கொடுத்ததை விமர்சிக்கிறார்கள். அந்த விமர்சனம் இருக்கட்டும். நாங்கள் வந்தால், வகுப்புவாரியாகவும் எண்ணுவோம், மொழிவாரியாகவும் எண்ணுவோம். அந்தந்த மக்கள் தொகையின் சதவீதத்திற்கு ஏற்ப பிரித்துக்கொள்வோம். இந்த உள்ஒதுக்கீட்டை பொறுத்தவரை, ஐயா நெருக்கடி கொடுத்தவுடன் இவர் இட ஒதுக்கீட்டைக் கொடுத்திருக்கிறார். இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதைப் போய் பேசிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்த இடஒதுக்கீட்டை தமிழ்ச் சமூகத்திற்கான இட ஒதுக்கீடாக பார்க்கிறேன்.
கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும். இப்போது செய்துவிட்டதைப் போய், கொடுக்காதே என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் சாப்பிடட்டும். பிறகு நாம் வாங்கிக்கொள்ளலாம். அவ்வளவுதானே. பிற ஜாதியினர் தங்கள் உரிமைகள் பறிபோவதாக நினைக்க வேண்டியதில்லை. எங்க அரசு வந்தால் எல்லோருக்கும் உள்ளதைக் கொடுத்துவிட்டுப் போகிறோம்.
தி.மு.கவை மட்டும் கடுமையாக விமர்சிப்பது ஏன்?
கே. சமீபத்தில் வி.கே. சசிகலாவை நேரில் சந்தித்து ஒரு மணிநேரம் பேசினீர்கள். என்ன பேசப்பட்டது என்பது குறித்து இதுவரையில் நீங்கள் கூறவில்லை...
ப. சொல்லக்கூடிய செய்தியாக இருந்தால் சொல்லியிருப்பேன். அது தேவையற்றது.
கே. உங்களைப் பொறுத்தவரை, ஆளும்கட்சியை விமர்சிப்பதைவிட, தி.மு.கவை விமர்சிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறீர்கள். ஏன்?
ப. இந்த மண்ணில் நடந்த தீமைகளுக்கெல்லாம் வேரைத் தேடிச் சென்றால் அது தி.மு.கவில்தான் இருக்கும். திராவிட அரசியல் கட்சி என்றால் தி.மு.கதான் தாய்க் கழகமாக இருக்கிறது. அங்குதான் நஞ்சின் வேர் இருக்கிறது. எனக்குத் தெரிந்து அண்ணாதுரை வரை சரியாக இருந்தது. கலைஞர் தலைமையேற்ற பிறகுதான், ஊழல், லஞ்சம், வளக்கொள்ளை, கொலை, முறையற்ற நிர்வாகம் போன்றவையெல்லாம் ஆரம்பித்தது. அவர் காமராஜர், கக்கன் போல இருந்திருந்தால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் ஏது? அ.தி.மு.க. சரியில்லைதான். ஆனால், பெற்றுப்போட்ட தாய் யார்?
எனக்கு ஒரு வன்மம் இருக்கிறது. என் இனம் செத்ததற்கு காரணம், காங்கிரஸ். கூட நின்று துரோகம் செய்தது தி.மு.க. அதை யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கு இதைப் பேச வேண்டுமா என்று கேட்கிறார்கள். பெரியார் என்றைக்கோ இறந்துவிட்டார்; இன்றைக்குப் போய் வணக்கம் செலுத்த வேண்டுமா? அண்ணா என்றைக்கோ இறந்துவிட்டார், இன்றைக்குப் போய் வணக்கம் செலுத்த வேண்டுமா? ரொம்ப நாளாக சாதி இருக்கிறது. அதை இப்போது ஒழிக்க வேண்டுமா எனப் பேசுவீர்களா?
ப. ஈழத்தில் வசிக்கும் தமிழர்களை சிங்களர்கள் அழிக்கிறார்கள். சிங்களர்களை இந்தியா நண்பன் என்று சொன்னால், நான் யார் உனக்கு? என் இனத்தைக் கொன்றொழிக்க தொடர்ச்சியாகக் கருவிகளைக் கொடுத்து, பயிற்சியும் பணமும் கொடுப்பாயானால் நாங்களும் எங்கள் இனத்தைப் பாதுகாக்க பயிற்சியும் பணமும் கொடுக்க வேண்டிவரும் என்று சட்டசபையில் பேசியிருப்பேன்.
சண்டை போட்டிருக்கனும். வெளியேறியிருக்கனும். அந்த நேரம் அரசு வீழ்ந்திருந்தால் உலக நாடுகளின் கவனம் இங்கே திரும்பியிருக்கும். சர்வதேச பிரச்னையாகியிருக்கும்.
ஏற்கனவே பதவியிழந்தோம் என்கிறார்கள். எதற்காக இழந்தீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே பதவியைத் தந்தது யார்? மக்கள்தானே. இப்போதும் இழந்திருந்தால் மீண்டும் வந்திருப்பீர்கள்.
எங்க அண்ணன் (பிரபாகரன்) சொன்னார், "அந்த அம்மையார் நம் ஆட்களை சிறை பிடித்தாரே தவிர, என்னைக் கண்டுகொள்ளவில்லை. கடற்கரை ஓரத்தை கண்டுகொள்ளவேயில்லை. ஆனால், நம்மவர் வந்துவிட்டார் என்றபோது, கடற்கரையை மூடிவிட்டார்" என்றார். மருந்து, மாத்திரை, உடை, பெட்ரோல், டீசல் போன்றவற்றை இலங்கை அரசு தடுத்துவிட்டது. அதனால் எங்க நாட்டுக்கு இங்கிருந்து கொடுத்தோம். அதை ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. இவர் தடுத்துவிட்டார்.
நானும் எங்கண்ணனும் இருட்டில் நின்றுதான் பேசினோம். ஒரு டார்ச் இருந்தது. அதை மேல் நோக்கி அடித்தபடி பேசினோம். "நாம் இருட்டில் இருக்கலாம். ஆனால், மருத்துவமனைக்கு மின்சாரம் தேவையல்லவா, பெட்ரோல், டீசலை வைத்துத்தான் அண்ணன் மின்சாரம் உற்பத்தி செய்து கொடுக்கிறேன். இப்போது அவை வரவில்லை. துணி வரவில்லை. மருந்து, மாத்திரை, ரத்தம் ஆகியவை வரவில்லை" என்று சொன்னார் பிரபாகரன்.
கே. ஜெயலலிதா இதையெல்லாம் கடல் வழியாகச் செல்ல அனுமதித்தார்; கருணாநிதி முதல்வரான பிறகு தடுத்துவிட்டார் என சொன்னாரா?
ப. ஆமாம். என் தலைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். அந்த நேரம் நான் கருணாநிதிக்கு நெருக்கமாக இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு, "நீ பேசிப் பாரேன். ஒரு ஓரத்தைத் தளர்த்திவிடச் சொல்" என்றார். நான் கண்கலங்கி மிகச் சோர்வடைந்துவிட்டேன். நான் சுப.வீரபாண்டியனைக் கூட்டிக்கொண்டு போனேன். அதற்கு முன்புவரை, கேட்டபோதெல்லாம் நேரம் கொடுத்தவர், அந்த நேரத்தில் தவிர்த்துவிட்டார். நாகநாதன் ஐயாவிடம் போனேன். ஒன்னும் நடக்கவில்லை.
நடேசனிடமிருந்து அழைப்பு வந்தபடியே இருந்தது. கடைசியாக, அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார். Lifelineஐ வெட்டிவிட்டதாக ரகோத்தமனே சொல்கிறார். இதைச் செய்திருக்கலாமே.
பிரபாகரன் செத்துவிட்டார் என்கிறார்கள். அப்போது நீங்கள் பதவிகேட்டு தில்லியில் இருக்கிறீர்கள். அங்கே ஊடகவியலாளர்கள் இதைக் கேள்வியாகக் கேட்டபோது, "ஒரு தெருவில் சாவுப் பறை கேட்டால், மற்றொரு தெருவில் மங்கல இசை கேட்டது என சங்க இலக்கியத்திலேயே சொல்லியிருக்கிறது" என்று பதில் சொன்னால் என்னை மாதிரி பிள்ளைக்கு எப்படியிருக்கும். அப்படியானால், ஒரு நாள் உங்கள் தெருவில் சாவுப் பறை கேட்கும், எங்கள் தெருவில் மங்கல ஒலி கேட்கும் என்ற முடிவுக்கு வருவோம் அல்லவா?
ப. அவர்கள் கொன்றார்கள். இவர்கள் கூட நின்றார்கள். காரணம் அற்பப் பதவி. சரத் பொன்சேகாவை அழைத்து எல்லா உதவியும் செய்கிறேன், "என் கணவன் இறந்த அன்று பிரபாகரன் சாக வேண்டுமென" சோனியா காந்தி சொல்லவில்லையா? ஜெயலலிதா இருந்தபோது போர் நடந்திருந்தால், கருணாநிதி பெரிய கிளர்ச்சியைச் செய்திருப்பார்.
கே. தமிழகத்தில் பா.ஜ.கவின் அண்மைக் கால செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? வேல் யாத்திரை முதற்கொண்டு பண்பாட்டுரீதியான விவகாரங்களை அவர்கள் கையில் எடுக்கிறார்கள்...
ப. அவர்களுக்கென கொள்கை கோட்பாடுகள் கிடையாது. நாங்கள் செய்ததைப் பார்த்து அவர்கள் செய்கிறார்கள். தாங்கள் ஆண்ட மாநிலங்களில் இதையெல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்ல அவர்களால் முடியவில்லை. இந்தியாவை ஆளக் கொடுத்தபோது, நாட்டையே பிச்சைக்கார நாடாக்கிவிட்டு, இங்கே வந்து ஆள்வதற்கு என்ன இருக்கிறது? நீங்கள் ஆண்ட ஒரு மாநிலத்தின் லட்சணத்தைச் சொல்லுங்களேன். இந்தியாவிலேயே கர்ப்பப் பையை அதிகமாக வாடகைக்கு விட்டுப் பிழைக்கும் மாநிலம் குஜராத்தான். இதெல்லாம் வளர்ச்சியா?
இங்கே சீமான் வேலை கையில் எடுத்துச் செல்கிறான். சரி நாமும் தூக்குவோம் என்கிறார்கள். ஒரு மதம் எப்படி கோட்பாடு, கொள்கையாக இருக்க முடியும்? கேட்டா கிறிஸ்தவ கைக்கூலி என்பான்.
கே. கடவுள், ஆன்மீகம், வழிபாடு பற்றிய உங்களுடைய, நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்ன?
ப. எங்களுக்குக் கடவுள் கிடையாது. தெய்வம் உண்டு. மூத்தோர் வழிபாடுதான் இந்த தெய்வங்கள். நாங்கள் முருகனை வழிபடுவது, அவன் முதல் திணையின் தலைவனாக இருப்பதால். இரண்டாம் திணையின் தலைவனாக, இறைவனாக இருப்பதால் கண்ணனை வழிபடுகிறோம். பிறகு இந்திரன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்..
கே. இந்திரன், கிருஷ்ணன் எல்லாம் வட இந்தியக் கடவுள்கள் இல்லையா?
ப. இந்தியா முழுவதும் பரவிவாழ்ந்தவன் தமிழன் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தவன் தமிழன் என டோனி ஜோசப் சொல்கிறார். ஒருத்தன் இதை விவாதிக்க வரவில்லை. நான் மட்டும்தான் கத்திக்கொண்டே இருக்கிறேன். இந்த நாட்டை தன்னுடையதென சொல்ல தமிழர்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்கிறார் அம்பேத்கர். அப்புறம் என்ன வட இந்தியா, தென்னிந்தியா? இப்போது குறுகிவிட்டோம், அவ்வளவுதான்.
கே. 2016ல் தேர்தலில் போட்டியிடத் துவங்கிய பிறகு நீங்கள் சந்திக்கும் 3வது பொதுத் தேர்தல் இது. நீங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி போதுமானதாக இருக்கிறதா?
ப. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. பேரெழுச்சியுடன் தம்பிகளும், தங்கைகளும் இங்கே குவிகிறார்கள். பெரியவர்கள்கூட, இந்தப் பிள்ளைகள் வந்தால் நன்றாயிருக்கும் என்கிறார்கள். எல்லோருமே சொல்கிறார்கள். இதைக் கேட்கும்போது, நம்பிக்கையும் உற்சாகமும் வருகிறது.
கே. நீங்கள் மிகச் சிறந்த பேச்சாளர். ஆனால், சில சமயங்களில் நீங்கள் பேசியதன் ஒரு பகுதி பெரும் சர்ச்சைக்குள்ளாகிவிடுகிறது. கொஞ்சம் கவனமாகப் பேசியிருக்கலாம் என்று நினைப்பதுண்டா..
ப. அதெல்லாம் இருக்கத்தான் செய்யும். "வினையாற்றாத சொல் வீண்" என்கிறார் சே குவேரா. என் கட்சிப் பிள்ளைகள்கிட்டதானே சொல்கிறேன்.. எங்க அண்ணன் கவுண்டமணி செந்திலை மிதிப்பதைப்போல மிதிப்பேன் என்றேன். அதை என் ஆளு ரசிக்கத்தான் செய்கிறான். இது ஒரு பெரிய இயக்கம். பெரிய தலைவர்கள் ஆரம்பித்து, ஆட்சியோடு விட்டுச் சென்ற கட்சியில்லை இது. நானாக கத்தி, கத்தி கொள்கை பேசி, கூட்டம் சேர்த்து உருவாக்கிய கட்சி இது. எனக்கு வலி அதிகம்.
இலங்கைப் பயணத்தில் பிரபாகரன் சொன்னது என்ன?
கே. தற்போது உங்கள் கட்சியில் பெண்களுக்கும் பாதி இடம் வழங்கப்படுகிறது. பெரிய கட்சியாக வளர்ந்த பிறகும் இதைச் செய்வீர்களா?
ப. இது கொள்கை முடிவு. எங்கள் கோட்பாடு. நாளை அமைச்சரவை அமைக்கும்போதும் இப்படித்தான். இதை எங்கள் தலைவர் செய்து காட்டினார். நானும் செய்வேன். சமூக நீதி பேசுகிறீர்களே, நீங்களும் கொடுங்களேன்.
கே. உங்கள் பேட்டிகளிலும் பேச்சிலும் உங்களுடைய இலங்கைப் பயணம் குறித்துப் பேசினால், உற்சாகமடைந்துவிடுகிறீர்கள். எவ்வளவு நாள்தான் அங்கே இருந்தீர்கள்?
ப. ஒரு மாதம் இருந்தேன். நான் தமிழன். எனக்கு ஒரு தேசம் வேண்டுமென எங்கள் அண்ணன் போராடிக்கொண்டிருந்தார். என் தலைவனை என் உயிருக்கு மேலாக நேசிக்கிறேன். அப்போது அந்த தலைவனை பார்க்கச் சென்ற பயணம் மிகக் கடுமையாக இருந்தது. போர் தொடங்கிவிட்ட சூழலில் அவசர அழைப்பு வந்தது. தவிர்க்க முடியவில்லை. நெடுமாறன், காசி ஆனந்தன், கொளத்தூர் மணி போன்றவர்கள் போகச் சொன்னார்கள். என்னுடைய தாய் - தந்தையர் வேண்டாம் என்றார்கள். "நாங்கள் செத்து விடுவோம்" என்றார்கள். "செத்துப் போங்கள்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டேன்.
கடுமையான பயணமாக இருந்தாலும் பயப்படாமல் சென்றேன். என்னோடு வந்த தம்பி, அண்ணியிடம் சொன்னார்: "நாங்கள் திரும்பி வரும்போது ராணுவம் மறித்து பாஸ்போர்ட்டைக் கேட்டது. பாஸ்போர்ட்டைக் காட்டியதும் சீமானா என்று ஆச்சரியப்பட்டார்கள். செத்தோம் என்று முடிவுசெய்தோம். ஆனால், இவர் பயமில்லாமல் காருக்குள் அமர்ந்தபடி சிரித்துக்கொண்டிருக்கிறார். பயமே சுத்தமாக இல்லை" என்றார். அப்படி பயமில்லாமல் இருந்தேன்.
நான் இங்கே வரமாட்டேன் என்றுதான் சொன்னேன். அங்கேயே இருந்துவிடுகிறேன் என்றேன். "இங்கே இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் இருந்து செய்வதாகச் சொல்லும் வேலையைச் செய்ய இங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள். நீங்கள் அங்கே போய் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய இங்கே யாரும் இல்லை. அங்கே திரும்பிச் செல்லுங்கள்" என்றார். "நான் அங்கே போய் என்ன செய்யப் போகிறேன்" என்றேன். "போய் இறங்குங்கள். என்ன செய்ய வேண்டுமென்பது உங்களுக்கே தெரியும்" என்றார். தெரியவந்தது. செய்கிறேன்.
நான் மட்டும் இல்லையென்றால் போரே நடக்கவில்லையே, யார் பிரபாகரன் என்று மூட்டை கட்டி அனுப்பியிருப்பார்கள். இதையேதான் பேசுவேன். இது அரசியல் இல்லை. அவசியம். இது என் இனத்தின் விடுதலை.