நீதிமன்றைத் தவறாக வழிநடத்தி எமது போராட்டத்தைத் தடுக்க முயற்சி- சிவயோகநாதன்
06 Mar,2021
நீதிமன்றினைத் தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்கமுனைவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் முன்னெடுக்கப்படும் சூழற்சி முறையிலான போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களுக்கு தடையுத்தரவுகளை வழங்கும் நடவடிக்கைகளை இன்று (சனிக்கிழமை) மாலை பொலிஸார் முன்னெடுத்தனர்.
இதன்போது, போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றிருந்த பொலிஸார், தடையுத்தரவுகளில் உள்ள பெயர்களை குறிப்பிட்டபோது அதில், போராட்டத்தில் உள்ளவர்கள் யாரும்இல்லாத காரணத்தினால் அங்கிருந்தவர்களின் பெயர்களைப் பதிவுசெய்துகொண்டு அங்கிருந்து சென்றனர்.
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையம் ஊடாக இந்தத் தடையுத்தரவுகளை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, நான்காவது நாளாகச் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் சங்கடத்தினை ஏற்படுத்துவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முகக்கவசம் அணியாத நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டு குறித்த பகுதியில் போராட்டம் நடத்தக்கூடாது என்று பொலிஸார் தெரிவித்ததாக சிவயோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜனநாயக ரீதியான தாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை நசுக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.