இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபில் தமிழர் தரப்பின் முன்மொழிவுகள் இடம்பெறவில்லை!
06 Mar,2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபு தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால் அதில், சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்த தமிழ் மக்களின் வேண்டுகோள்கள் இடம்பெறவில்லை.
இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபில், ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை எதிர்கால விசாரணைகளில் பயன்படுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் அதிகளவிற்கு ஓரங்கட்டப்படுதல், சிவில சமூகத்தினர் கண்காணிக்கப்படுதல் மற்றும் அச்சுறுத்தப்படுதல், ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை பொதுமக்கள் நினைவுகூறுவது மீதான கட்டுப்பாடுகள், நினைவுத்தூபிகள் அழிக்கப்படுதல் குறித்த கரிசனைகளும் புதிதாக இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் மனித உரிமை ஆணையகம், காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியன வலுவான விதத்திலும் சுதந்திரமாகவும் செயற்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்ற விடயமும் புதுப்பிக்கப்பட்ட வரைபில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பயண தடைகள் மற்றும் போக்குவரத்து தடைகள் போன்றவற்றை விதிக்குமாறும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து எதனையும் புதுப்பிக்கப்பட்ட வரைபு குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.