பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது.
இலங்கையின் முழுமையான பதிலை, இணையத்தில் வெளியிடக்கோரி இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதன்படி, ஐ.நா. வெளியிட்டுள்ள பதிலில், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைபு குறித்த ஏற்பாடுகள் தொடரப்படவில்லை என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது.
நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறை மேற்பார்வைக் குழு, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில் இந்த நேரத்தில் அத்தகைய சட்டம் தேவையற்றது.
எவ்வாறாயினும், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தின் முன்னேற்றத்திற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசாங்கம் கூறியது.
இந்தச் செயற்பாட்டின் மூலம், பிற அதிகார வரம்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளுக்கு உதவுவதாக அரசாங்கம் கூறியது.
அத்துடன், உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சட்டமா அதிபர் மறுஆய்வு செய்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவாக முடிப்பது குறித்தும் அரசாங்கம் தனது பதிலில் கூறியது.
இதேவேளை, ஒட்டுமொத்தமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தவறான அல்லது ஆதாரமற்ற அல்லது புறம்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என இலங்கை கூறியது.
அத்துடன், பொதுச்சபைத் தீர்மானம் (GA) 60/251இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உலகளாவிய பக்கச்சார்பற்ற தன்மை, புறநிலை மற்றும் தெரிவு செய்யப்படாத கொள்கைகளை மனித உரிமைகள் பேரவை மீறுவதாகவும் இலங்கை கூறுகிறது.
மேலும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான முன்மொழிவு உட்பட, சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னெடுப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் முன்மொழிவை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.
இலங்கைக்கு எதிராக இத்தகைய ஏற்றத்தாழ்வான மற்றும் தேவையற்ற நடவடிக்கைகளைத் தூண்டுவதற்கு சில காரணிகள் இடைவிடாமல் தொடர்ந்து முயற்சிக்கின்றன. இந்நிலையில், அரசியல் மயமாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு மனித உரிமைகள் பேரவை தன்னை ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை வருத்தம் தெரிவிக்கிறது.
மேலும், சர்வதேச மட்டத்திலான எந்தவொரு விருப்பமும், இறையாண்மை கொண்ட நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீட்டிற்கு ஒப்பாகும் என்று இலங்கை எச்சரிக்கிறது.
அத்துடன், தனிநபர்கள் அல்லது அதிகாரிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் பயணத் தடைகளுக்கு அழைப்பு விடுப்பதானது, நீதிமன்றம் அல்லது அமைப்பு ரீதியான ஆதாரம் இல்லாத நிலையிலான முன்மொழிவாகும். இது அவர்களின் உரிமைகளை மீறுதல் மற்றும் இயற்கை நீதிக்கான கொள்கைகளை மீறுதலாகும்.
இதேபோல், ஐ.நா. அமைதி காக்கும் படையில், இலங்கை இராணுவத்தின் ஈடுபாட்டை மறுஆய்வு செய்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைாளரின் பரிந்துரையையும் இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (Daily Mirror)