இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீவு பகுதியொன்றை தெரிவு செய்துள்ளதற்கு அந்தத் தீவில் வசிக்கும் மக்கள், இஸ்லாமிய மக்கள் என இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கம் எடுத்த இந்த முடிவுக்கு அரசாங்கத்தின் உள்ளேயே எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இலங்கை உள்நாட்டுப் போரால் இடம்பெயர்ந்து வாழும் பகுதிகளில் ஒன்றாக இரணை தீவு உள்ளது.
இரணை தீவு எங்கு உள்ளது?
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடாவில் அமைத்துள்ளது இரணை தீவு. இப்பகுதியில் கோவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சமீபத்தில் அறிவித்தார்.
கோவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
உடல்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார தரப்பினரே தீர்மானங்களை எட்டியதாக கூறிய அமைச்சரவை பேச்சாளர், அரசாங்கம் அந்த விடயத்தில் எந்தவித தலையீடுகளையும் செய்யவில்லை என குறிப்பிட்டார்.
இஸ்லாமியர்கள் எதிர்ப்பது ஏன்?
இரணை தீவு பகுதியில் கோவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கத்தினால் எட்டப்பட்டுள்ளதாக தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை இரணை தீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதன் ஊடாக, அந்த வைரஸ் நீரில் பரவும் என அறிவியல் ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறிய அவர், உலகிலுள்ள 197 நாடுகள் உடல்களை அடக்கம் செய்து வருவதாகவும் நினைவூட்டியுள்ளார்.
எனினும், இலங்கை அரசாங்கம் முஸ்லிகளின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்காதிருப்பதற்கு தொடர்ந்தும் முயற்சிப்பதாக அவர் கூறுகின்றார்.
இலங்கை அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக, ஒரு கட்டத்தில் கோவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை மாலைத்தீவில் அடக்கம் செய்ய மாலைத்தீவு இணக்கம் வெளியிட்டதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அதற்கும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த திட்டத்தையும் அரசாங்கம் கைவிட்டிருந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், மீண்டும் தீவொன்றில் உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்வந்திருப்பது, மனப்போக்கில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை எடுத்து காட்டுவதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகின்றார்.
போரால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதி
கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை இரணை தீவில் அடக்கம் செய்வதற்கு இரணை தீவு அருட்தந்தை மடுத்தீன் பத்திநாதர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தொடர்பில் தாம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தினால் பல்வேறுப்பட்ட பகுதிகள் முன்மொழியப்பட்ட போதிலும், அவற்றை தவிர்த்து, யுத்தத்தால் இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் மக்கள் வாழும் இரணை தீவில் உடல்களை அடக்கம் செய்ய எட்டப்பட்டுள்ள தீர்மானம் கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவிக்கின்றார்.
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 2017ம் ஆண்டு காலப் பகுதியிலேயே இந்த பகுதி மக்கள் இரணை தீவில் குடியேறியதாக அருட்தந்தை மடுத்தீன் பத்திநாதர் குறிப்பிடுகின்றார்.
இரணை தீவு பகுதியானது, நீரேந்து பகுதி எனவும், கோவிட் வைரஸ் நீருடாக பரவும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் அச்சம் வெளியிடுகின்றார்.
இரணை தீவில் மக்கள் குடியேறி, தமது வாழ்வாதாரத்தில் படிப்படியாக முன்னேறி வருகின்ற இந்த சூழ்நிலையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.
இரணைமடு பகுதியில் 165 குடும்பங்கள், அட்டை பண்ணைகளை அமைத்து, அங்கு வசித்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கை அரசிற்குள்ளேயே மாறுபட்ட கருத்து ஏன்?
கோவிட் – 19 தொற்றில் உயிரிழப்போரில் உடல்களை அடக்கம் செய்ய இரணை தீவு பொருத்தமான இடம் கிடையாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
இரணை தீவில் உடல்கள் அடக்கம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், சிறுபான்மை மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தான் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரணை தீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் ஊடாக வருடந்தோறும் சுமார் 25,000 அமெரிக்க டாலருக்கு மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டள்ள நிலையில், குறித்த தீர்மானம் தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் எனவும் தான் எடுத்துரைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
குறித்த கருத்துகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் செவிமடுத்ததுடன் மாற்று ஏற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இரணை தீவில் அடக்கம் செய்வது மற்றும் அடக்கம் செய்யப்படும் விதம் தொடர்பிலான தகவல்களை தாம் விரைவில் நாட்டு மக்களுக்கு வெளியிடவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.