ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் திருப்தி என்கிறார் சுமந்திரன்!
27 Feb,2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு சார்பாக 20 நாடுகள் உரையாற்றியிருந்தாலும் கூட 10 நாடுகளே வாக்களிக்கும் உரிமையை கொண்டிருக்கின்றன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு சார்பாக 20 நாடுகள் உரையாற்றியிருந்தாலும் கூட 10 நாடுகளே வாக்களிக்கும் உரிமையை கொண்டிருக்கின்றன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது 20 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றியிருந்தன. ஆனால் அந்த 20 நாடுகளில் 10 நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வாக்களிக்கும் தகுதியை கொண்டிருக்கின்றன.
இதேவேளை பிரிட்டன் ஜேர்மனி கனடா உள்ளிட்ட நாடுகள் இலங்கை தொடர்பான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடும் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.
அதேபோன்று இணை அனுசரணை நாடுகளில் புதிதாக மாலாவி என்ற நாடு இணைந்து கொண்டுள்ளது. இதனால் பேரவையின் தென் பகுதிப் பிரிவு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு பார்க்கும்போது பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படுகின்றது.
மிக முக்கியமாக இந்தியா இந்த விவாதத்தில் தெரிவித்த கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகமூட்டியிருக்கின்றன. குறிப்பாக இலங்கையின் இறைமை மற்றும் நில ஒற்றுமையை அங்கீகரிப்பதாக கூறிய இந்தியா தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை மிகவும் திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றது. இது எமக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதுடன் உற்சாகமூட்டியிருக்கின்றது.
அந்த வகையில் பார்க்கும் போது பிரேரணையை எம்மால் வெற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதில் அரசாங்கத்துக்கு ஆதரவு கிடைக்கும் என்று கூற முடியாது. முஸ்லிம் நாடுகள் தம்மை ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் சடலங்கள் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டிருக்கின்றது. ஆனால் அது இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தாக்கம் செலுத்தும் என்று கூற முடியாது.
அதுமட்டுமன்றி முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு ஏற்கனவே எமது பிரேரணையை ஆதரிக்கும் வகையிலேயே உரையாற்றியிருக்கின்றன. இதேவேளை தற்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையானது மனித உரிமைப் பேரவையின் அதிகாரங்களுக்கு உட்பட்ட பல விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றது. முக்கியமாக ஒரு முழுமையான பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறல் அடையப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
அந்த முழுமையான பொறிமுறை என்ற வசனத்தை நாங்கள் எடுத்து நோக்க வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மட்டுமே அவ்வாறு ஒரு முழுமையான பொறிமுறை காணப்படுகிறது.
எனவே இது திருப்தி அளிக்கும் படியான உள்ளடக்கங்களை கொண்டிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இது நிச்சயமாக வெற்றி பெறும். ஒரு சிலர் இந்த பிரேரணையின் உள்ளடக்கங்கள் போதுமானதாக இல்லை என்றும் ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அவர்கள் இந்த பிரேரணையின் உள்ளடக்கத்தை சரிவர படிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற சொற்பதம் அங்கே குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதற்காக இது வலுவற்றது என்று கூறிவிட முடியாது. ஆனால் அரசியல் தீர்வு என்ற விடயத்தையும் இதில் உள்ளடக்கியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன். எப்படியிருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இலங்கை தொடர்பாக ஜெனீவா பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையானது இலங்கையை மேற்பார்வையில் வைத்துக் கொள்வதற்கான ஒரு திருப்திகரமான வரைபாகவே அமைந்திருக்கிறது என்றார்.