இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மட்டுமன்றி சர்வதேச நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்வதற்கு இந்தியா நடவடிக்கைகளை முன்னின்று செயற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மட்டுமன்றி சர்வதேச நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்வதற்கு இந்தியா நடவடிக்கைகளை முன்னின்று செயற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும் இலங்கைத் தமிழரின் வருங்காலமும்’ என்ற தொனிப்பொருளில் சூம் ஊடகம் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.
அதில், அவர் “கடந்த 11 வருடங்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் விரும்பியோ விரும்பாமலோ ஐ.நா. மனித உரிமைகள் சபையை மையப்படுத்தியதாகவே இருந்துவந்துள்ளது. இதன் அர்த்தம் மனித உரிமைகள் சபையின் ஊடாகத் தமக்கு நீதியும் சமாதனமும் கிடைக்கும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துச் செயற்பட்டார்கள் என்பது அல்ல.
இனப் படுகொலையின் உச்சக் கட்டம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற பின்னர் மிகவும் பலவீனமும் சோர்வும் அடைந்திருந்த எமக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபை இலகுவான தெரிவாகத் தென்பட்டதால் அதனை நாம் இறுக்கமாக பற்றிக்கொண்டுவிட்டோம்.
சர்வதேச சட்டங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள், மனித உரிமைக் கோட்பாடுகள், சர்வதேச உறவுகள், புவிசார் அரசியல் ஆகியவற்றைச் சரியான முறையில் கையாண்டு சந்தர்ப்பங்களை உருவாக்கி அல்லது இருக்கும் சந்தர்ப்பங்களை முறையாகக் கையாண்டு மனித உரிமைகள் சபைக்குச் சமாந்திரமாக வேறு வழிகளில் செல்வதற்கு நாம் பெரியளவில் ஈடுபடவில்லை.
இதற்குக் காரணம், முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் இராணுவ மற்றும் அரசியலில் எமது மக்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் 2009 வரை தங்கியிருந்தமையே. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நாம் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருந்தது. வடக்கு, கிழக்கிலே நாம் சுயாதீனமாகச் செயற்பட முடியாதளவுக்கு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.
நன்கு கட்டமைக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகள் எம்மத்தியில் இருக்கவில்லை. சர்வதேச அரசியலும், இராஜதந்திரமும் எமக்கும் புதிதாக இருந்தன. இதே நிலைமைதான் புலம்பெயர் மக்கள் மத்தியிலும் இருந்தது. கட்டமைப்புக்களையும் செயற்பாடுகளையும் புதிதாக உருவாக்கிச் செயற்படவேண்டி இருந்தது. நிலத்திலும், புலத்திலும் பல குழப்பங்களும் முரண்பாடுகளும் ஏற்பட்டன.
தமிழர் என்ற இனத்தின் நிமிர்த்தமும், தமிழ் என்ற மொழியின் நிமிர்த்தமும் நாம் உலகில் மிகவும் பலமான ஒரு சக்தியாக இருப்பதற்கான எல்லாமே எம்மிடம் இருந்தும் துரதிஷ்டவசமாக வீழ்ந்துகிடந்த எம்மைக் கைகொடுத்துத் தூக்கி நிமிர்த்தித் தெம்பூட்டும் நிலையில் தமிழகமும் இருக்கவில்லை. எமது புலம்பெயர் சமூகமும் இருக்கவில்லை. ஆதலால், நாம் அநாதரவாக இருந்தோம் என்பதே உண்மையானது.
ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் நாம் பலவற்றைக் கற்றிருக்கின்றோம். எமது தவறுகளை உணர்ந்து கொண்டிருக்கின்றோம். உலகத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றோம். பூகோள அரசியலைப் புரிந்து கொண்டிருக்கின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் சபையைப் புரிந்து கொண்டிருக்கின்றோம். நாம் தெளிவுபட்டு வருகின்றோம். இந்த தெளிவு நிலத்திலும் ஏற்படுகின்றது, புலத்திலும் ஏற்படுகின்றது. ஆகக்குறைந்தது செயற்பாடுகளை மையமாக வைத்தேனும் நிலத்திலும், புலத்திலும் ஒற்றுமை துளிர்விட ஆரம்பித்திருக்கின்றது.
எதிர்வரும் மனித உரிமைகள் சபைத் தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தற்போது வெளியாகியுள்ள முதலாவது தீர்மான வரைபு பெரும் ஏமாற்றத்தை எமக்கு அளித்திருக்கின்றது. இதுதொடர்பாக, எனது ஏமாற்றத்தையும் கடும் அதிருப்தியையும் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தேன்.
இந்த வரைபு காரணமாக இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பாதுகாப்புத் தொடர்பாக நிச்சயமற்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதுடன் அவர்கள் மத்தியில் தமது பாதுகாப்புப் பற்றிய ஒரு அச்சமும் உருவாகி வருகின்றது. இந்த வரைபு அப்படியே நிறைவேற்றப்பட்டால், தமிழ் மக்களின் பாதுகாப்புப் பெரும் ஆபத்தான ஒரு நிலைமைக்குச் செல்லும். ஏற்கனவே, எமக்கு எதிரான செயற்பாடுகள் கழுத்துவரை வந்துவிட்டன.
இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கான ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளரே குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரைபு வலுவாக்கப்படுவதற்கு அல்லது மேலும் வலுவற்றதாக்கப்படுவதற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. இனப்படுகொலை, போர்க்குற்றம் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம் ஆகியவற்றை விசாரிப்பதற்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்துவதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை மற்றும் ஐ.நா. பொதுச்சபை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் வலியுறுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளினதும் கோரிக்கையாக இருக்கின்றது. இந்த வலியுறுத்தலை தீர்மானத்தில் கொண்டுவருவதற்கு இந்தியா முக்கிய வகிபாகத்தை மேற்கொள்ள முடியும். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மட்டுமன்றி சர்வதேச நீதி மன்றத்துக்கும் (International Court of Justice) கொண்டு செல்வதற்கு இந்தியா நடவடிக்கைகளை முன்னின்று செயற்படுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக வடக்கு கிழக்கிலே சர்வதேச சமூகத்தினால் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுவதற்கு இந்தியா தலைமை தாங்கி செயற்படுவதானது இலங்கை தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் பல அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்கும்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் வடக்கின் சில கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களைச் சீனாவுக்குக் கொடுப்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை நிறுத்துவதற்கும் இந்தியாவின் தென்கோடியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கென உச்சபட்சமான நிரந்தரமான அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமாகும். அத்துடன், சர்வதேச நீதிமன்றம் மற்றும் பொது வாக்கெடுப்பு ஆகியனவும் எமக்கு பரஸ்பரம் நன்மை கொடுப்பன.
இலங்கையின் இராஜதந்திர சூழ்ச்சிகளுக்கு இந்தியா ஏமாந்து, இந்தப் பொன்னான சந்தர்ப்பங்களை நழுவவிடக் கூடாது. கொழும்புத் துறைமுக விடயமும் சரி, அல்லது வடக்கின் மூன்று தீவுகள் விடயத்திலும் சரி இலங்கை அரசாங்கம் இந்தியா சார்பில் மேற்கொள்ளும் விட்டுக்கொடுப்புக்களோ அல்லது இணக்கப்பாடுகளோ தற்காலிகமானவையே அன்றி நிரந்தரமானவை அல்ல என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவின் மத்திய அரசாங்கத்துக்கு இந்த விடயத்தில் பாரிய அழுத்தம் கொடுக்கும் பணியை தமிழ்நாடு செய்யவேண்டும். இது வெறுமனே ஒரு அரசியல் வலியுறுத்தலாக அன்றி மக்கள் இயக்கத்தின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்றைய பத்திரிகைகளில் மூன்று தீவுகள் பற்றிய ஒப்பந்தம் தமக்கே தரப்பட்டுள்ளதாகவும் மூன்றாம் நபர்கள் எந்தவித குறுக்கீடுகளையும் செய்யப்படாது என்றும் சீனக் கம்பனியொன்று கேட்டுள்ளது என்ற செய்தி வந்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் இரு பெரும் நாடுகளுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தினால் பாதிக்கப்படப்போவது இலங்கையின் வட மாகாண மக்களும் இந்தியாவின் தமிழ் நாடுமேயாகும்.
நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, மனித உரிமைகள் சபைக்கு சமாந்திரமாக எமக்கான நீதியையும் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் பல வழிகளைத் திறந்து செயற்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம்.
எவ்வாறு சர்வதேச நீதிமன்றத்தை நாடுவது, எவ்வாறு பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஏற்பாடு செய்வது, எவ்வாறு எமது மக்களை வலுவூட்டுவது, எவ்வாறு Responsibility to Protect கோட்பாட்டை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது, எவ்வாறு ஆய்வு மற்றும் அறிவியலைப் பயன்படுத்திக் கொள்வது, எவ்வாறு ‘தமிழ்’ என்ற அடையாளத்தையும் தமிழர் என்ற இனத்தையும் பயன்படுத்திக் கொள்வது என்றெல்லாம் நாம் பல வழிகளிலும் சிந்தித்துச் செயற்படுவதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.