சரணடைந்தவர்களை படுகொலை செய்தது யார்? குற்றச்சாட்டு
17 Feb,2021
போராளிகளையும் பொதுமக்களையும் சரணடைய கூறிய போது அவர்கள் படையினரிடம் சரணடைந்தார்கள்.
அவர்கள் மீது யார் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது? விடுதலைப் புலிகளே தாக்கினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இறுதிப்போரில் சரணடைந்தவர்களை இலங்கை படையினரே படுகொலை செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மீண்டும் நிராகரித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
எமது படையினருக்கு எதிராக இப்படிப்பட்ட சவால்களை ஜெனிவாவில் ஏற்படுத்தியது மங்கள சமரவீரவாகும். ஐ.நாவில் பதவியொன்றை பெற்றுக்கொள்ளவே இதனை செய்தார்.
2010 இல் காணாமல் போனார்கள் என்ற பிரச்சினையில்லை. காணாமல் போனோர் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள் என்பது காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் நட்டஈடு பெற்றுத் தருவதாகவும் வீடுகளைப் பெற்றுத் தருவதாகவும் உறுதிமொழி கூறி வடக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் அவர்களை வீதிகளுக்கு அழைக்கின்றனர்.
வடக்கு அரசியல்வாதிகளின் மனைவி மற்றும் பிள்ளைகள் வெளிநாடுகளில் சுக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.
இன்று எமது ஜனநாயகம் வேறூன்றியுள்ளது சமாதானமும் உள்ளது.
வடக்கில் பெண்களின் தாலியை பணயம் பெற்ற விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் இருக்கும் சக்திகள், தமிழ் மக்களின் பிரச்சினைகளை விற்பனை செய்கின்ற அரசியல்வாதிகள் - இன்று இலங்கையில் உள்ள உண்மையான பிரச்சினைகளைப் பாருங்கள்.
இன்று மனித உரிமை மீறல் பிரச்சினை இலங்கையில் இல்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர்கூட அன்று இங்கிலாந்தில் தான் இருந்தார்.
அவரது மனைவியே இங்கு வந்து விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளை உருவாக்கினார். ஆனாலும் அவர் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கேள்விகேட்கவில்லை என்றார்.