முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட குருந்தூர்மலை, குமுளமுனை உள்ளிட்ட தமிழர்களின் கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் புராதான பௌத்த விகார்கள் இருந்ததெனக் கூறி, அதனைத் தொல்பொருள் ஆய்வு செய்ய முயலுவதாய்ப் பொய்யுரைத்து தமிழர்களின் வழிபாட்டுத்தலங்களை இராணுவத்தின் உதவியுடன் இடித்துத் தகர்க்கும் சிங்களப் பேரினவாத அரசின் கொடுஞ்செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட குருந்தூர்மலை, குமுளமுனை உள்ளிட்ட தமிழர்களின் கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் புராதான பௌத்த விகார்கள் இருந்ததெனக் கூறி, அதனைத் தொல்பொருள் ஆய்வு செய்ய முயலுவதாய்ப் பொய்யுரைத்து தமிழர்களின் வழிபாட்டுத்தலங்களை இராணுவத்தின் உதவியுடன் இடித்துத் தகர்க்கும் சிங்களப் பேரினவாத அரசின் கொடுஞ்செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஈழ நிலத்தில் 2 இலட்சம் அப்பாவி தமிழர்களைத் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்து முடித்த பிறகும், தமிழர்கள் மீதான வன்மமும், இனத்துவேசமும் துளியும் அடங்காது இனமழிப்பு நடவடிக்கையைத் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருவதன் நீட்சியாக, தமிழர் அடையாள சிதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களையும், தொன்மச்சான்றுகளையும் மெல்ல மெல்ல அழிக்கும் கொடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது சிங்களப்பேரினவாத அரசு.
அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தைத் தகர்த்தது, தமிழர் வழிப்பாட்டுத்தலங்களை இடித்து, தமிழர் பகுதிகளிலெல்லாம் பௌத்த விகார்களை நிறுவி வருவது, போருக்குப் பிந்தைய பத்தாண்டுக் காலக்கட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறித்துச் சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர் பிரதேசங்களை இராணுவத்தின் துணையோடு சிங்களமயமாக்குவது, தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள், பண்பாட்டுச் சிறப்பு மிக்க இடங்களைச் சிதைத்து, தமிழர்கள் வாழ்விடங்கள் என்பதற்கான அடையாளங்களை முற்றாக அழிப்பது என இனப்படுகொலைச் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக இத்தகைய படுபாதகச்செயல்களைச் செய்து வருகிறது சிங்களப் பேரினவாத அரசு.
தமிழர்களைத் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆட்படுத்தி, கொன்று முடித்த சிங்களப்பேரினவாத அரசு, தமிழ் அடையாளங்களையும் மெல்ல மெல்ல அழித்து அப்புறப்படுத்தி, இலங்கை எனும் நாட்டைச் சிங்களர்களுக்கு மட்டுமேயான ஒற்றைத்தேசமாக மாற்ற முயன்று சிங்கள இனவெறியை நிலைநாட்டத் துடிக்கும் சதிச்செயலின் செயல் வடிவமே இவையாவுமாகும்.
அருகாமையிலிருக்கும் ஒரு நாட்டில் இத்தகைய இனவெறிக்கொடுமைகளும், அடையாள அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும்போதும் இந்தியாவை ஆளக்கூடிய பாஜக அரசு அதுகுறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காது கள்ளமௌனம் காப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கும் பச்சைத்துரோகமாகும். ‘தமிழர்கள்தான் இந்துக்கள்; இந்துக்கள்தான் தமிழர்கள்’ என்று பொய்யுரைத்து வாக்கரசியல் செய்யும் பாஜக, சிங்களப்பேரினவாதத்தால் தமிழர்களது வழிப்பாட்டுத்தலங்கள் தாக்குதலுக்குள்ளாகும்போதும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும்போதும், பாரிய இனப்படுகொலைக்கு ஆட்படுத்தப்படும்போதும் அமைதி காப்பதன் மூலம் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் பாஜக உணர்த்திக்கொண்டிருக்கிறது. அதனால்தான், முல்லைத்தீவில் நீராவியடிப் பகுதியில் பிள்ளையார் கோயில் வளாகத்திற்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தபோதும், இன்றைக்கு ஆதிசிவன் ஐயனார் கோயிலை இடித்து, பெளத்த விகாரை நிறுவுகிறபோதும் அதற்கு எதிர்வினையாற்றாது அவர்களால் கடந்துபோக முடிகிறது. ஆகவே, தமிழர்கள் இனியும் அம்மத அடையாளத்தைத் தூக்கிச் சுமக்காது இனமாய் ஒன்று திரள வேண்டியது காலத்தின் பெருங்கடமையாகிறது.
குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டு, அங்கிருந்த சூலம் ஒன்றும் உடைத்தெறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, குருந்தூர் தொடர்பான வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு முல்லைத்தீவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழர்களுக்குச் சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம்; அதைத்தவிர வேறு எவ்விதக் கட்டுமானங்களையும் இரு சாராரும் செய்யமுடியாது;
தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்வதாக இருந்தால் யாழ் பல்கலைக்கழகத் தொல்லியல்துறை துணையோடு மட்டுமே செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அதையும் மீறி இராணுவத்தின் துணையோடு தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் பௌத்த விகாரையை நிறுவ முயல்வது முழுக்க முழுக்கத் தீவிர சிங்களமயமாக்கல் நடவடிக்கையே அன்றி வேறில்லை. இதனைத் தாயகத் தமிழகத்தில் வாழும் தமிழர்களும், உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழர்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இனியும் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துகொண்டு கடந்துபோவோம் எனச் சிங்கள ஆட்சியாளர்கள் எண்ணுவார்களேயானால் அவர்களது எண்ணம் தவிடுபொடியாகும் நாள் வெகுதொலைவிலில்லை. சிங்கள ஆட்சியாளர்களின் இத்தகையப் வன்மப்போக்குகளும், இனவெறி நடவடிக்கைகளும், இனமழிப்பு செயல்பாடுகளும் தொடரும்பட்சத்தில் அதற்கான எதிர் விளைவுகளைப் பெருமளவில் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.