மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் 35 ஆயிரத்து 640 பேர் பாதிப்பு!
23 Dec,2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வந்த அடை மழை காரணமாக 10 ஆயிரத்து 716 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 21, 22ஆம் திகதிகளில் பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 6 ஆயிரத்து 680 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 496 பேரும், கோறளைப்பற்று வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 5689 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1561 குடும்பங்களைச் சேர்ந்த 5037 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கோரளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 402 குடும்பங்களைச் சேர்ந்த 1285 பேரும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேரும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 359 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேரும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேரும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேரும், மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், போரதீவுப்பற்று வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கிரான், செங்கலடி, வவுனதீவு பிரதேசங்களில் தலா இரண்டு வீடுகளும், வாகரை, கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை, மண்முனை வடக்கு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒரு வீடுமாக மொத்தம் 10 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளுக்கமைவாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.