கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 64 தமிழ்க் கைதிகளுக்கு கொரோனா தொற்றியிருப்பதாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கைதிகள்.
இவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளோ, சுகாதாரப் பராமரிப்போ இல்லை என்பதால் அவர்களின் நிலைமை ஆபத்தானதாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பிலுள்ள ஐநா வதிவிட பிரநிதியிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டிய தேவை இருப்பதை இந்த செய்தி மீண்டும் ஒரு தடவை உணர்த்தி இருக்கின்றது.
இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகமாகத் தொடங்கியபோதே கைதிகள் பிரச்சனை தொடர்பாக முக்கியமாக பேசப்பட்டது. சிறைச் சாலைகளில் காணப்படும் நிலைமை கொரோனா விரைவாக பரவுவதற்கு சாதகமானதாக இருப்பது இதற்கு காரணம்.
உதாரணமாக 100 கைதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 400 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், போதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடிய வசதிகள் சிறைச்சாலையில் இல்லாததும் இதற்கு காரணம். இந்த நிலையில் சிறைச்சாலைகளில் காணப்படும் அடர்த்தியைக் குறைக்கும் வகையில், முடிந்தளவுக்கு கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த மாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
கடந்த ஒரு மாத காலகட்டத்தில் சுமார் 7,000 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இருந்த போதிலும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் தமிழ் அரசியல் கைதிகளும் இருப்பதாக தெரியவில்லை.
பிணைக்கு பணம் கட்ட முடியாமல் சிறைவாசம் அனுபவிப்பவர்கள், குற்றப்பணம் கட்டமுடியாதவர்கள், சிறிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களும் வயதானவர்களுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கைதிகளை விடுதலை செய்வதற்காக அரசாங்கம் வகுத்த வரையறைகளுக்குள் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளடக்கப்படவில்லை என்பதும் தெரிகின்றது.
தமிழ் அரசியல் கைதிகளை பொருத்தவரையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வருபவர்கள். ஒரு சிலர் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் வாடுபவர்கள். அல்லது மிகவும் சிறிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என்று வகைப்படுத்தலாம்.
குறிப்பிட்ட சில கைதிகள் பல வருடங்கள் சிறைச்சாலைகளில் இருந்த பின்னரே ஒரு வருடம் அல்லது இரண்டு வருட தண்டனை பெறுகின்றார்கள். அவ்வாறானவர்களை விடுதலை செய்வதையிட்டு அரசாங்கம் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.
கைதிகளை விடுதலை செய்யும் போதும் அரசாங்கம் இன ரீதியாக பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கின்றதா என்ற கேள்வியைத்தான் வெளிவரும் செய்திகள் எழுப்புகின்றன. இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் கட்சிகளும் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து இருக்கின்றன. ஆனால், எதுவுமே நடைமுறை சாத்தியம் ஆகவில்லை. சட்டரீதியான பிரச்சினைக்குள் இவ்விடயம் சிக்க வைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டிய பிரச்சினை.
தமிழ் அரசியல் னைதிகளின் விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து விரைவில் அதனைச் சாத்தியமாக்க வேண்டும்.