இலங்கை முஸ்லிம் மக்கள் தமது மத கொள்கைகளுக்கு அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை மறுப்பதானது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், உடல்களை எரிக்கும் முடிவை எடுத்தவர்கள் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள்தான் என்றும், அதிகாரிகளின் முடிவில் தலையிட மாட்டோம் என்றும் இலங்கை அரசு தெரிவிக்கிறது.
இந்த கூட்டத்தின் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
கோவிட் – 19 தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து தாமதமின்றி இறுதி முடிவை எடுக்குமாறும் கூட்டமைப்பு கோரியுள்ளது.
மருத்துவ நிபுணர்களின் கருத்துகளுக்கு அமைய, கோவிட்-19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதினால், ஏனையோருக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், உலகிலுள்ள பல நாடுகளில் ஏனையோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்ற அடிப்படையில், உடல்கள் புதைக்கப்படுவதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, உரிய நியாயமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
முஸ்லிம் மக்கள் தமது மத கொள்கைகளுக்கு அமைய, உடல்களை அடக்கம் செய்வது அவர்களின் உரிமை எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்களின் மத கொள்கைகளுக்கு மாறாக செயற்படுவதானது, அவர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயற்பாடு எனவும், இந்த செயற்பாடு தொடரக்கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
‘அடிப்படை உரிமையை மறுக்கும் செயற்பாடு’ – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவிப்பதானது, தமது அடிப்படை உரிமையை மறுக்கும் செயற்பாடு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.
கோவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை மாலைத்தீவில் (மாலத்தீவு) அடக்கம் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது.
இலங்கையிலேயே வாழ்ந்து, மரணித்த பின்னர், இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு தங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்தநாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து நிற்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கை காரணமாக முஸ்லிம் சமூகம் பாரதூரமான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டுள்ள போதிலும், நீதி நியாயமற்ற முறையில் அரசாங்கம் நடந்துக்கொள்வதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் பதில்
கோவிட்-19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் முடிவுகளை எடுக்கவில்லை எனவும், சுகாதார தரப்பினரே அந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இந்த விடயத்தில் சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் எடுத்த முடிவில் தலையிட மாட்டோம் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில கூறுகின்றார்.