தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை தொடரவேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் தொடர்பில் ஆலோசிப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையானது தவறானது என்று பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையிலேயே பிரித்தானிய உள்துறை அலுவலகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,
அண்மையில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை தவறானது என்று பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கமே முழுமையான முடிவினை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதற்கு இலங்கை அரசாங்கம் மேன்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்ததுடன், பிரதமர் மகிந்த ராஜபக்சவும், பிரித்தானிய அரசாங்கம் தடையை தொடரும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தீர்ப்பாயத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடரவேண்டும் என்பதற்காக தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ள குறைகளை சரிசெய்வது தொடர்பில் ஆலோசிப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு உதவ இலங்கையின் லண்டன் உயர்ஸ்தானிகரகம் முன்வந்துள்ளபோதும் அந்த உதவியை பெற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டை இன்னும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிடவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கான லண்டன் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக உள்துறை அலுவலகம், உள்துறை அமைச்சிடம் இருந்து ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் இதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை தொடர்பில் மேன்முறையீட்டை மேற்கொள்ளமுடியும் என்று அது எதிர்பார்ப்பதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை தவறானது என்று விசேட தீர்ப்பாயம் தெரிவித்ததன் பின்னர் இலங்கையின் லண்டன் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனா, தெற்காசிய வெளியுறவுத் துறை இயக்குநர் பேர்கஸ் ஆல்டுடன் வழியாக தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார், அத்துடன் பிரித்தானிய உள்துறை அலுவலக செயலாளருக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதன்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் மற்றும் தடை நீக்கப்பட்டால் சர்வதேச சமூகத்திற்கு ஏற்படவுள்ள ஆபத்துகள் தொடர்பான எந்தவொரு தகவலையும் பிரித்தானிய உள்துறை அலுவலகத்திற்கு உதவ தயாராக உள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கினால் விரோதங்களை புதுப்பிக்க மட்டுமே உதவும் என்ற வகையில் சில தமிழ் புலம்பெயர்வாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் கொழும்பு ஊடகமொன்றிக்கான செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நீதிமன்றத் தீர்ப்பானது களப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், சட்டப் போராட்டம் தொடரும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.