இலங்கை நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எதிர்கட்சியினரும் ஆதரவாக வாக்களித்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமுன்ற உறுப்பினர் அரவிந்த் குமாரை, கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
இதேபோல, தமது கட்சித் தலைவரின் ஆசிர்வாதத்துடனேயே, 20ஆம் திருத்தத்துக்கு தாம் ஆதரவளித்ததாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான ஹரீஸ் கூறியுள்ளார்.
20ஆவது திருத்ததம் மீதான வாக்கெடுப்பில், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். தலைவர் ஹக்கீம் மட்டும் எதிர்த்து வாக்களித்திருந்தார்.”உங்கள் மனச்சாட்சிப்படி நீங்கள் ஆதரவாகவும் வாக்களிக்கலாம், எதிராகவும் வாக்களிக்கலாம். கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அந்த உரிமையை தருகின்றேன்.
ஆதரவாக வாக்களிப்பவர்கள் கட்சியினதோ, தலைவரினதோ கட்டுப்பாட்டை மீறியதாக கருதப்படமாட்டாது” என, தலைவர் ஹக்கீம் கூறியதாக, ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த திருத்தம் நிறைவேற்றி நிகழ்வு பற்றி நீங்கள் அறிய வேண்டிய தகவல்களை வழங்குகிறோம்.
திருத்தத்துக்கு ஆதரவு அளித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் யார்?
மொத்தம் 156 வாக்குகள் திருத்தத்துக்கு ஆதரவாக கிடைத்தன. எதிராக 65 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
ஆளும் பொதுஜன பெரமுன கட்சியினதும், அதன் பங்காளிக் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மேற்படி திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அதேவேளை எதிரணியிலிருந்தும் இந்த திருத்தத்துக்கு ஆதரவாக 8 வாக்குகள் கிடைத்தன.
5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 4 உறுப்பினர்கள், இந்த திருத்தை ஆதரித்து வாக்களித்தனர். அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் மட்டுமே திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த அதேவேளை, மேற்படி கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் ஆகியோர் 20ஆவது திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
இதேவேளை, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் நடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த் குமார், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆகியோரும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.