சர்வதேச தடையே மிக வல்லமை கொண்ட அமைப்பை அழித்தது- புலிகளின் தடை நீக்கம் குறித்து ஸ்ரீதரன்
22 Oct,2020
தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய மிக வல்லமை கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது, சர்வதேச நாடுகள் விதித்த தடையே அந்த அமைப்பு 2009 இல் அழிக்கப்படக் காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு குறித்து பி.பி.சி. செய்திப் பிரிவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்களின் உரிமைகள் இல்லாது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது பிரித்தானியாவின் நிலைப்பாட்டை தமிழர் என்ற வகையில் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்கள் மீதான உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகள் தவறிழைக்கவில்லை என்ற வகையிலான பிரித்தானிய நீதிமன்றத் தீர்ப்பு, அந்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை விடுத்துள்ளதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரித்தானிய ஆணைக்குழுவின் தீர்ப்பை மதித்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா அரசாங்கம் நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் கொள்கைகளும், எண்ணங்களும் நேர்மையான வழியில் இருந்தது என்பதை ஏற்று, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான, கௌரவமான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கான அழுத்தத்தை பிரித்தானியா கொடுக்க வேண்டும் என ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.