லீ குவான் யூவாக மாற ஆசைப்பட்டால் மட்டும் போதாது;
22 Oct,2020
நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவை ஆகியனவற்றை சுதந்திரமாக செயலாற்றவிட்டிருந்தால் ஏப்ரல் அனர்த்தம் நடைபெற்றிராது. உலகில் அநேகமான நாடுகளில் ஜனாதிபதி முறை ஆட்சி இல்லை.
அப்படியாயின் அந்த நாடுகளில் எல்லாம் பாதுகாப்புப் பிரச்சனை இருக்கின்றதா? அல்லது ஜனாதிபதி முறையுள்ள நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினைஇல்லாமல் இருக்கின்றதா? ஆகவே மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைத் தவிர்த்து இந்நாட்டின் சாபமாக உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக களைந்து மக்களுக்கு நேரடியாகப் பொறுப்புக்கூறக் கூடிய சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.
நீதித் துறை, பொலிஸ் துறை மற்றும் பொது அலுவலகர் சேவை போன்ற அலகுகளின் சுயாதீனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி சிந்திப்பதே நாட்டைப் பற்றி நேசிக்கும் ஒவ்வோருவரின் கடமையாகும். நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவையை ஒரே நிறைவேற்று ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ்க் கொண்டுவருவது பாரிய எதிர்விளைவுகளை எதிர்காலத்தில் உண்டாக்கும்.
இந்த அரசு இன்னும் 6 மாதகாலத்தில் புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கும் போது இத்தகைய ஒரு சட்ட திருத்தத்தை அவசரகதியில் கொண்டுவர முனைவதானது அவர்களுக்கு பின்னால் இருக்கும் இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதையே தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. லீ குவான் யூவாக மாற ஆசைப்பட்டால் மட்டும் போதாது; சிங்கப்பூரில் பக்கச்சார்பான தலைவராக அவர் இருக்கவில்லை: கோட்டாவிற்கு சாட்டையடி கொடுத்த விக்னேஸ்வரன்.