இலங்கையிடம் உத்தரவாதம் பெற மோடியிடம் விக்கி வலியுறுத்து!
20 Oct,2020
பௌத்தத்திற்கான நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சிக்காக வழங்கப்படும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டமைக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பாரத பிரமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள சி.வி. விக்னேஸ்வரன், பிரதமர் மோடியின் செயலானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைக் கூட்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த மத மேம்பாட்டுக்காக இந்திய வழங்கிய 15 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் அந்த நிதி ஊடான பயனைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையை விதிக்கவேண்டும்.
இலங்கை ஆயுத படைகளுக்கு வழங்கப்படும் பயிற்சியின் ஊடாக தமிழ் மக்களுக்கு எதிராகப் பாவிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை இந்தியா, மஹிந்த ராஜபக்ஷவிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.