தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் என முன்னாள் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா வெளியிட்ட கருத்து, சர்வதேச ரீதியில் மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு உணவு, தண்ணீர் வழங்கி, அவரை இலங்கை இராணுவமே சுட்டுக் கொலை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். அப்போது அவையில் பேசிய சரத் ஃபொன்சேகா பாலச்சந்திரன் தொடர்பாக சில கருத்துகளை பதிவு செய்தார்.
"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அவரது இளைய மகன் பிரபாகரன் பாலச்சந்திரன் வரையான குடும்பத்திலுள்ள எவருமே அப்பாவிகள் கிடையாது" என அவர் குறிப்பிட்டார்.
'பிரபாகரன் மகன் சிறுவர் படை தளபதி' - முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா
இலங்கை: 'பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட பாலச்சந்திரன்'
'இலங்கை - போர் குற்றங்களை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம்'
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான க. துளசியிடம் பிபிசி தமிழ் வினவியது.
"இலங்கையில் தமிழர்கள் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், தமிழர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு" என அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், பல்வேறு கட்டமைப்புகளையும்;, பல்வேறு படையணிகளையும் கொண்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு காணப்பட்டது என்று அவர் கூறினார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிறார் படையணியா?
"எந்தவொரு காலக் கட்டத்திலும் சிறுவர் போராளிகளையோ சிறுவர் படையணிகளையோ தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருக்கவில்லை" என கூறிய அவர், தமது அமைப்பில் சுய விருப்பத்தின் பேரில் இணைந்துக்கொண்ட 18 வயதிற்கு குறைவானோரை சர்வதேச இராணுவ சட்டங்களுக்கு அமைய விடுதலைப் புலிகள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு முன்னரான காலத்திலும் சிறுவர் போராளிகளை யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை என க. துளசி கூறுகிறார்.
இவ்வாறான நிலையில், வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் என்ற சிறுவன், படையணிகளுக்கு பொறுப்பாக போராளியாக இருந்தார் என முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுவர்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலையிலிருந்து தங்களை புனிதவான்கள் என்று காட்டிக்கொள்வதற்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பிரபாகரனின் குடும்பத்திலுள்ள ஏனையோரும் ஒவ்வொரு படையணிகளுக்கு பொறுப்பாக இருந்துள்ளனர் என சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தும் க. துளசியிடம் தமிழ் வினவியது.
அப்போது அவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனி ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த கதையொன்றை நினைவூட்டினார்.
சார்ள்ஸ் அன்டனி, சிறுவனாக இருந்த போது, தனது தந்தையான வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் சென்று, 'அப்பா நான் வரி உடுப்ப போட்டு பார்க்க போறேன்" என்று கேட்டதாகவும், அதற்கு பிரபாகரன், 'தமிழீழத்தில் எல்லா இடத்திலும் பயிற்சி முகாம்கள் இருக்கு. நீ எங்கயாவது போய் பயிற்சி எடுத்து போட்டு, வரி உடுப்ப போட்டு படம் எடுக்குறதுல எனக்கு பிரச்சினை இல்ல" என பதிலளித்ததாக துளசி கூறினார்.
இதேபோல, சார்ள்ஸ் அன்டனி 18 வயதை அடைந்ததன் பின்னர், பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சிகளை பெற்றதையும் துளசி நினைவுகூர்ந்தார்.
பிரபாகரனின் மூத்த மகன் என்ன செய்தார்?
அதன்பின்னர் சார்ள்ஸ் அன்டனி ஒரு சாதாரண போராளியாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துக்கொண்டு, அதிலிருந்து படிப்படியாக முன்னேறி புலிகள் அமைப்பின் சிறு பிரிவாக செயற்பட்ட கணினி பிரிவிற்கு பொறுப்பாக வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட ஆளணிப் பற்றாக்குறையினால், பிரபாகரனின் மகளான துவாரகா, விடுதலைப் புலிகள் அமைப்பின் சாதாரண போராளியாக தனது மண்ணிற்கு தனது கடமையை நிறைவேற்றினார் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 18 வயதுக்கு குறைவானோர் இருக்கவில்லை எனவும், போர் குற்றச்சாட்டுக்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக ஒரு சிறுவனை போராளியாக்கி, ஒரு படையணிக்கு தளபதியாக்கியிருப்பது வேதனையான விடயமாகவே தாம் கருதுவதாகவும் முன்னாள் போராளியான க.துளசி குறிப்பிடுகின்றார்.
பிரபாகரனின் மனைவி, விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தமை குறித்தும், க.துளசி பிபிசி தமிழிடம் விவரித்தார்.
'அண்ணி வந்து வீட்டுல பிள்ளைகள வளர்க்கும் ஒரு சாதாரண குடும்ப பெண்மணியாகவே இருந்தார்" என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான க.துளசி கூறினார்.
சர்வதேசத்திற்கு முன்பாக இவ்வாறான போலி குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் விடுத்தமையினாலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சர்வதேசத்தில் தடை விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தருணத்தில், யுத்தத்தினால் உயர்நீத்தவர்களை நினைவுக்கூர்வதற்கு தடை விதிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் வாழ்வதற்கு தயாராக இருக்கின்றார்கள் எனவும், இதனை கருத்திற் கொண்டு அரசாங்கம் நியாயமான விடயங்களை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான க.துளசி தெரிவிக்கின்றார்.