இந்தியாவிடம் இலங்கை ரூ.7,500 கோடி கேட்கிறது
02 Oct,2020
இலங்கை அரசு, அன்னியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் கீழ், மேலும், 7,500 கோடி ரூபாய் தரும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவால் சுற்றுலா வருவாய் குறைந்ததை அடுத்து, இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது.இதன் காரணமாக, தர நிர்ணய நிறுவனமான, மூடிஸ், சமீபத்தில், இலங்கையின் கடன் தகுதியை குறைத்தது.
இந்நிலையில், இலங்கை மூலதனச் சந்தைகள் துறை இணையமைச்சர் அஜித் நிவர்டு கப்ரால் கூறியதாவது: இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக, இந்திய ரிசர்வ் வங்கியிடம், ஜூலை மாதம், அன்னியச் செலாவணி பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
அதன்படி, 3,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அமெரிக்க டாலர்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.தற்போது, மேலும், 7,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு, டாலர்களை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். வரும், 2022 நவம்பருக்குள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் பெற்ற டாலர்களை, தற்போதைய ரூபாய் மதிப்பின் அடிப்படையில், இலங்கை அரசு திரும்ப வழங்கி விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.