பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
24 Sep,2020
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மத்திய சிறையிலுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அத்துடன், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என்பதுடன் வயதான பெற்றோரைப் பார்க்கவேண்டும் என்ற காரணங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது அற்புதம்மாள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சிறை விதிகளில் இருந்து விலக்களித்துப் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பேரறிவாளனின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு நிபந்தனைகளுடன் 30 நாட்களுக்கு பரோல் வழங்குவதாக உத்தரவிட்டனர்.
இதேவேளை, இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் கடந்த 8ஆம் திகதி விசாரணைக்கு வந்தததுடன், பரோல் மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில், ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னாட்டு விசாரணை முகாமையைக் காரணங்காட்டி ஏழு பேர் விடுதலை தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய முடிவெடுத்த அரசே, பரோல் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது என நீதிமன்றில் பேரறிவாளனின் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.