இராணுவம் அச்சுறுத்துவதாக வவுனியா மக்கள் குற்றச்சாட்டு
20 Sep,2020
வவுனியா- வடக்கின் தனிக்கல்லு பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களிற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் குற்றம் சாட்டப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், “தனிக்கல்லு பகுதியில் அமைந்துள்ள எருக்கலம் பிலவு என்ற 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்கள் நூறு வருடங்கள் பழமையானது.
இன்று எமது பரம்பரை, விவசாயகாணிகளிற்கு செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுக்கிறது. காணியின் உறுதியை தந்தபின்னர் காணிக்குள் இறங்குமாறு இராணுவத்தால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.
இதனால் இராணுவத்தின் கடுமையான நெருக்குவாரத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தனிக்கல்லு பகுதி மாத்திரம் இல்லாமல் எல்லைப்பகுதிகளில் உள்ள அனைத்து காணிகளிலும் இதேபிரச்சனை காணப்படுகின்றது.
எமது வயல்நிலத்தில் உள்ள சிறிய பற்றையை துப்புரவாக்குவதற்கு சென்றாலும் காணியின் உறுதியை பிரதி எடுத்து இராணுவத்திடம் கொடுத்தபின்னரே நாம் உள்ளே இறங்க அனுமதிக்கப்படுகின்றோம். எனவே இந்த நிலைமை மாற்றப்படவேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு, சமூகம் தந்து இவ்விடயங்களை தெரிவிக்குமாறு ஒருங்கிணைப்பு குழு தவிசாளரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.