விடுதலைப் புலிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான தேவை இருக்கவில்லை எனவும் யுத்தத்தின் மூலமே தீர்வைக்காண முயன்றதாகவும் சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நோர்வேயின் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் இரண்டு தரப்புக்கும் சமமாக பணியாற்றியதாக தான் நம்பவில்லை எனவும் அவருடைய பக்கச் சார்பு தொடர்பாக தனக்கு பாரிய சந்தேகம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி பாலித கோஹன முன்னர் அரசாங்க சமாதமான செயலகத்தின் தலைவராகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகளுடனான மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத்தின் சார்பில் பாலித கோஹன 2006ஆம் ஆண்டில் கலந்துகொண்டிருந்தார். ஜெனீவாவில் நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகள் மற்றும் நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் பாலித கோஹன பங்ககேற்றிருந்தார்.
இந்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் தெரிவிக்கையில், “அந்தக் காலத்தில் ஒருநாடாக, ஒரு அரசாங்கமாக பேச்சுவார்த்தை ஊடாக யுத்தத்தை முடிப்பதற்கு நாங்கள் பாரிய முயற்சிகளை செய்திருந்தோம். ஆனால், நாங்கள் மேற்கொண்ட அந்த அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் அமைப்பு நிராகரித்தது.
ஒருசில சமயங்களில் ஜெனிவாவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அங்கு இரண்டு சந்தர்ப்பங்களிலும் பேச்சுவார்த்தையிலிருந்து புலிகள் அமைப்பே எழுந்து சென்றது.
மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நோர்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெறுவதற்கு ஏற்படாகியிருந்தது. நானும் எனது குழுவும் அங்கு சென்றிருந்தோம். அப்போது புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவில்லை. எனக்கு அந்த நிகழ்வு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
பேச்சுவார்த்தைக்குத் தயாராகுவதற்கான அறைக்குக்கூட புலிகளின் பிரதிநிதிகள் வரவில்லை. எனவே, சமாதானத்தின் ஊடாக இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புலிகளுக்கு எந்த தேவையும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவர்களின் விருப்பமும் நோக்கமும் யுத்தத்தின் ஊடாக பிரச்சினையைத் தீர்ப்பதாகவே காணப்பட்டன.
யுத்தம் செய்யாமல் சமாதானத்தை அடையக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை புலிகள் அமைப்பு இல்லாது செய்துவிட்டதே என்ற கவலை எனக்கிருக்கிறது. எந்தவொரு நபருமே யுத்தத்திற்கு செல்வதற்கு விரும்பமாட்டார். அது அவர்களின் முதலாவது நோக்கமாக இருக்காது. யுத்தம் செய்யாமல் பிரச்சினையைத் தீர்ப்பதே எமது முதன்மை நோக்கமாக இருக்கும். ஆனால், அன்று புலிகளுக்கு யுத்தம்செய்து வெற்றிபெறும் நோக்கமே காணப்பட்டது. யுத்தம் தொடர்பான அச்சுறுத்தலை வெளிப்படுத்தியது புலிகள் அமைப்புதான். அந்த அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை.
நான் புலிகள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றேன். ஒஸ்லோவில் புலிகளின் உறுப்பினர்களைச் சந்தித்தேன். ஜெனிவாவில் நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகளில் அவர்களைச் சந்தித்தேன். புலிகளின் தலைவர்களையும் சந்தித்திருந்தேன். அன்டன் பாலசிங்கத்தை சந்தித்தது மட்டுமன்றி நான் அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தினேன்” என்று தெரிவித்தார்.
இதேவேளை, நோர்வேயின் சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்முடன் செயற்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், எரிக்சொல்ஹெய்ம் இரண்டு பக்கங்களுக்கும் சமமாக பணியாற்றியதாக நம்பவில்லை எனவும் அவருடைய பக்கச் சார்பு தொடர்பாக தனக்கு பாரிய சந்தேகம் காணப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.