யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடான பாலியல் பகிடிவதை (சைபர் ராகிங்) நடத்தப்பட்டு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சைபர் ராகிங் அதிகரித்துள்ளதாக வியாழனன்று தகவல் வெளியாகியிருந்தது.
முதலாம் ஆண்டு மாணவர்கள், மூத்த மாணவர்களினால் கடந்த காலங்களில் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு பகிடிவதைக்கு உட்படுத்தும் மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநிறுத்தி தண்டனைகளை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இணையத்தின் ஊடாக பகிடிவதைகளை நடத்த மாணவர்கள் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற செயலிகள் மூலம் வீடியோ அழைப்பை மேற்கொண்டு, அதனூடாக பகிடிவதைக்கு மாணவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இணையவழியின் ஊடாக அழைப்பை மேற்கொள்ளும் மூத்த மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களின் ஆடைகளை கழற்றி உடம்பை காட்டுமாறு வலியுறுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக துணை வேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக இணையவழியை பயன்படுத்தி பாலியல் ரீதியிலான பகிடிவதைகளே நடத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகம் 10 மணிநேர விசாரணைகளை நடத்தியுள்ளதாக துணை வேந்தர் கூறியுள்ளார்.
இந்த விசாரணைகளின் ஊடாக முகாமைத்துவ வணிக பீடத்தில் அடையாளம் காணப்பட்ட 4 மாணவர்களை கற்றல் நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் போலீஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கின்றது.
சைபர் ராகிங் தொடர்பில் அரசாங்கம் கவனம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இணையவழியின் ஊடாக பாலியல் பகிடிவதையை நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ வணிக பீட மாணவர்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, நிர்வாணமாக படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு முதலாம் ஆண்டு மாணவர்களை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு செய்ய தவறும் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடாது எனவும் மூத்த மாணவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.