தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியில் இருந்து விலக விக்னேஸ்வரன் முடிவு!
18 Sep,2020
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும் போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கிலேயே இணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு தான் தீர்மானித்ததாக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் இது தொடர்பாக தான் இன்று காலையில் பேசியதாகவும், தமிழ் மக்கள் பேரவையை கட்சி சார்பற்ற வகையில் ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவான நிலையை உருவாக்குவதற்காக இவ்வாறுதான் இணைத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய தேசிய ரீதியான பிரச்சினைகள் உருவாகும் போது தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்களையும், கட்சிகளையும் ஒன்றிணைத்துச் செயற்படுவதற்கான சூழல் இதன்மூலமாக ஏற்படுத்தப்படும் என்பதால்தான் இவ்வாறான முடிவைத் தான் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.