.
கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியின் உறுப்பினராக உள்ள பௌத்த பிக்கு ஒருவர், திருகோணமலை- திரியாய் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளார்.
கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியின் உறுப்பினராக உள்ள பௌத்த பிக்கு ஒருவர், திருகோணமலை- திரியாய் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அரிசிமலை விகாரையில் தங்கியுள்ள குறித்த பௌத்த பிக்கு, திரியாய் பகுதியில் அரசாங்கத்திடம் அனுமதிப் பத்திரம் பெற்ற காணிகளில் விவசாயம் செய்வதற்கு, விவசாயிகளுக்கு தடைவிதித்துள்ளார் என்றும் இரா.சம்பந்தன் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலங்கள் பல்வேறு தனியாருக்கும், அரசாங்க அனுமதிப் பத்திரம் பெற்றவர்களுக்கும் சொந்தமானது என்றும், இங்கு பல தசாப்தங்களாக- போருக்கு முன்பிருந்தே இந்த விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினரான, அரிசிமலை விகாரையில் உள்ள பௌத்த பிக்கு, இந்த வயல் நிலத்தில் உழவை மேற்கொண்ட விவசாயிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதையும்,
கடந்த 23ஆம் திகதி அங்குள்ள பிள்ளையார் கோவிலில் விழா ஒன்றுக்காக கூடியிருந்த மக்களிடம் பொலிசாருடன் சென்ற குறித்த பௌத்த பிக்கு, விவசாயம் செய்ய முயன்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார் என்பதையும், இரா.சம்பந்தன் ஜனதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
எனவே குறிப்பிட்ட பௌத்த பிக்கு அல்லது பொலிசாரின் தலையீடின்றி, விவசாயிகள் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியிடம் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு தொல்பொருள் செயலணி தொடர்பாக, கடந்த ஜூன் 15ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாகவும், ஆனால் இதுவரை தமக்கு எந்தக் கடிதமும் கிடைக்கவில்லை என்றும், இரா.சம்பந்தன் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.