உயர் இராணுவ அதிகாரிகள் எனக்கு மரணம் பயம் ஊட்டுவதால் ஆவதொன்றுமில்லை துணிச்சலுடன் கூறுகின்றார் விக்கி
07 Sep,2020
நான் அன்று சொன்னது இதைத்தான். தமிழ் உலகின் மூத்த மொழி தமிழர்கள் இந்த நாட்டின் மூத்த குடிகள் என்றேன். தமிழ் மக்கள் இந்நாட்டில் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்கு இலக்கியங்களும், தொல்பொருள்களும், கல்வெட்டுக்களும் என பல ஆதாரங்கள் உள்ளன. இதனை ஆதாரங்களுடன் முன்வைத்தேன். அதற்கு எதிராக தென்னிலங்கை அரசியல்வாதிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றார்கள். அவர்கள் இதுகாறும் செய்துவந்த மோசடி எங்கே வெளிவந்து விடுமோ என்று அஞ்சுகின்றார்கள்.
அவர்கள் தங்கள் வரலாற்றைப் புனைகின்றார்கள். புனைந்து பேசுகின்றார்கள். நாமோ எங்களுக்கு என இருக்கின்ற உண்மையான வரலாற்றை இதுகாறும் பேசாது இருந்துவிட்டோம். இந்த உண்மைகளை நான் பேசுவது, நாட்டைப் பிரிக்கவல்ல. இனப்பிரச்சினையில் இனியாவது சிங்கள மக்கள் விட்டுக் கொடுப்புடன் நடப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே. அப்படி நடந்தால் இலங்கைத் தீவின் அமைதிக்கு அது வழியமைக்கும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு. நெருக்குதல் ஒன்று தான் பெரும்பான்மையினரை தமது மாட மாளிகைகளில் இருந்து கீழிறக்கும் என்பது எனது கருத்து.
துரதிஷ்ட வசமாக எமது தலைவர்கள் எமது வர லாற்றைப் பேசத் தயங்குகின்றார்கள். அவர்களுக்கு எமது வரலாறு பற்றி உண்மையில் தெரியாதா அல்லது தெரிந்தும் மெளனிகளாக மாறிவிட்டார்களா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவ, மாணவியர்க்கும் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்க்கும் இந்த உண்மைகள் தெரியும். கற்றறிந்தவர்களும் அறிஞர்களும் சொல்லுகின்ற உண்மை வரலாற்றை எவர் வேண்டுமானாலும் படிக்கலாம்.
அறிந்துகொள்ளலாம். எங்கள் வரலாற்றை பற்றி சரியாகத் தெரியாத எமது தலைவர்கள் எப்படி சிங்களத் தலைவர்களுடன் பேச முடியும்? அல்லது அதைப் பேசத் தயங்குபவர்களால் எப்படி இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும்? எல்லா வினைகளுக்கும் எதிர்வினை உண்டு என் பதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது, அதனைப் பிரிவினைவாதம் என்று எச்சரிக்கின்ற சிங்கள தலைவர்கள் இருக்கும் நாடாளுமன்றத்தில், எங்கள் நியாயங்களை இனத்திற்காகப் பேசுகின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லையே! படைத்துறை உயர்தளபதி சரத் பொன்சேகா என்னைச் சுடுவோம் என்ற தொனியில் பேசியதை நீங்கள் பார்த்துக் கேட்டிருப்பீர்கள்.
அதாவது, சிங்கள மக்க ளைக் கோபம் ஊட்டியவர்களைத் தாம் சுட்டுக்கொன்றதை எனக்கு நினைவுபடுத்துவதாகத்தான் திரு.பொன்சேகா அவர்கள் சொல்லி எச்சரித்தார். மரணம் என்பது எல்லோருக்கும் பொது. படைத்துறை உயர் தளபதிகளுக்குங் கூட மரணம் வரும். நான் ஓய்வெடுத்து என் பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக் களிக்கலாம்.
ஆனால், வடக்கின் முதலமைச்சர் பதவிக்காக இழுத்து வரப்பட்ட எனக்கு, சில கடமைகள் இருப்பதை உணர்ந்தேன். பல உண்மைகளை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையும் இப்போது உணர்ந்துகொண்டுள்ளேன். என்று கூறியுள்ளார் விக்கி ஐயா.