யாழ். பண்ணையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக் கூடு: கூடுதல் அகழ்வுக்கு அனுமதிபெற உத்தரவு!
14 Aug,2020
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக் கூடு மற்றும் ஆடைகளை சான்றாக பார்வையிட்ட யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ.ரி.சிவலிங்கம் அவ்விடத்தை மேலும் அகழ்வு செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்ற அனுமதியைப் பெறும்வரை குறித்த பகுதியைப் பாதுகாத்து வைத்திருக்குமாறு அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம், பண்ணை மீனாட்சி அம்மன் கோயில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் ஆடைகளை யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம், நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு வரும்வரை, கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எச்சங்கள் மற்றும் ஆடைகளை அதே இடத்தில் வைத்து பாதுகாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளதுடன், கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்புக் கடமையில் அமர்த்துமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஏனைய பகுதிகள் தோண்டப்பட்டு, கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எச்சங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.