அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றியினைத் தொடர்ந்து குறித்த அமைப்பு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
இலங்கையில் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியினைப் பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
மேலும், புதிய அமைச்சரவையும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“புதிய அரசாங்கம் இன, மத சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை அமுல்படுத்துவதுடன் அதற்கான நீதி கோரும் அமைப்புகளின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்.
ஜனாதிபதி கோட்டாபய ரடாஜபக்ஷ 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் பல யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை தனது அமைச்சரவையில் நியமிக்கிறார்.
அவரது, சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது பாதுகாப்புச் செயலாளராக உள்ள கமால் குணரத்ன மற்றும் தற்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோரைப் போன்று மோசமான யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்.
நாட்டில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சிவில் சமூகத்தின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானத்தை ராஜபக்ஷ அரசாங்கம் வெளிப்படையாகவே நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையில் ஒருமித்த தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கம் உடன்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச தரத்திலான பேச்சுரிமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறது.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடத்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் நிலவிய அடக்குமுறை சூழலை நோக்கி வேகமாக நகர்த்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.