இலங்கையில் நடந்து முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக சிறைச்சாலைக்குள் இருந்தவாறே இரண்டு பிரபலங்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் அந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளாக 54 ஆயிரத்து 198 வாக்குகளை பெற்றுள்ளார்.
சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிறையிலிருந்தவாறே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனைகளின்போது, அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
அந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த பிள்ளையான்?
மட்டக்களப்பை சேர்ந்த சிவநேசத்துரை சந்திரகாந்தன், 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்ததாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துக் கொண்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன், பின்னர் அனைவராலும் பிள்ளையான் என அழைக்கப்படுகிறார்.
விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு பிள்ளையான் தலைமை தாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 2004ஆம் ஆண்டு விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் வெளியேறினார்கள்.
பிரேமலால் ஜயசேகர
இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா அம்மான், பிள்ளையான் ஆகியோர் இணைந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார்கள்.
அந்த கட்சியிலிருந்து கருணா அம்மான் விலகிய நிலையில், பிள்ளையான் தொடர்ந்து அந்த கட்சியை வழிநடத்தினார்.
இவ்வாறான நிலையில், கிழக்கு மாகாண சபை தேர்தல் 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
கிழக்கு மாகாண முதலாவது முதல்வர்
அதில் போட்டியிட்ட பிள்ளையான், கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே, ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை சம்பவம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பிள்ளையான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதன்படி, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தவாறே போட்டியிட்ட பிள்ளையான், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகரவிற்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 237 வாக்குகள் கிடைத்துள்ளன.
இரத்தினபுரியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, கஹவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அந்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவிற்கு, இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த 31ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
சிறைச்சாலையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகரவும் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில், கொலை குற்றச்சாட்டு தொடர்பில் சிறைவாசம் அனுபவித்துவரும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் 9ஆவது நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ளனர்.