இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு! தென்னிலங்கைக்கு சம்பந்தன் பதில்
02 Aug,2020
இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தமிழரசுக் கட்சி காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது உரையாற்றிய அவர்,
“நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று இடம்பெறப் போகின்றது. நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கபட்டு அதனூடாக ஆட்சி அதிகாரங்கள் தொடர்பான விடயங்கள் பரிசீலிக்கபட்டு அந்தந்தப் பிராந்தியங்களில் வாழும் மக்கள் விசேடமாக வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் தங்களுடைய நாளாந்த விடயங்களைத் தாமே நிறைவேற்றுவதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும்.
13ஆம் திருத்தச் சட்டத்தை எமது பிரச்சினைக்கான முழுமையான தீர்வாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் பல குறைகள் இருக்கின்றன. அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும்.
அந்தந்தப் பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள் தமது தலைவிதியை தீர்மானிக்க்கூடிய சூழல் சட்ட ரீதியாக ஏற்படுத்தப்படவேண்டும். இது தொடர்பாக நாம் கடந்த ஆட்சியில் பல முன்னேற்றகரமான விடயங்களை முன்னெடுத்தோம். அதன்மூலம் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள் காணப்பட்டன.
ஆனால் துரதிஷ்டவசமாக அந்த அரசு தொடர்ந்து ஆட்சிபுரியக் கூடிய சூழல் இருக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனால் அந்தக் கருமத்தை தொடர முடியவில்லை. ஆனால் விரைவில் தொடருவோம், தொடரவேண்டும்.
உண்மையில், இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத் தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்திருக்கிறார்கள். எனவே, இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு” என்றார்.