தமிழர்-சிங்களவர் இடையிலான பிளவுகளுக்கு பிரதான காரணம் பௌத்த பிக்குகளே- விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை
30 Jul,2020
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு ஆட்சியாளர்களைவிட பௌத்த பிக்குகளே காரணம் என விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் பிரதித் தலைவர் செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “சமஷ்டியைக் கோரினால் வடக்கு கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பௌத்த துறவிகள் தெரிவிக்கின்றனர். உண்மையில் சமஷ்டி தொடர்பான அறிவற்றவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்.
1926இல் சமஷ்டியை முதன்முதலாகக் கோரியது சிங்கள மக்கள்தான். பண்டாரநாயக்கவும் அதுதொடர்பான முன்மொழிவுகளை வைத்திருந்தார்.
எனவே, சமஷ்டி தொடர்பான அறிவற்றவர்களாக அரசியல் மேடைகளிலே அவர்கள் பேசுவது அவர்களின் துறவறத்திற்கு துரோகம் இழைப்பதாகவே பார்க்க முடியும். இந்த நாட்டில் இனக் கவலவரங்களை முன்னெடுத்ததிலே பௌத்த பிக்குகள்தான் பிரதான இடத்தினை வகித்திருந்தார்கள்.
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு சிங்கள மக்கள் மற்றும் ஆட்சியாளர்களைவிட பௌத்த பிக்குகளே பிரதான காரணமாக இருந்துள்ளார்கள்.
அரசியல் கருத்துக்களைக் கூறுவது துறவிகளின் செயற்பாடு அல்ல. அத்துடன் அவ்வாறான துறவிகளுக்கு அரசாங்கத்தினால் பல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
எனவே, அறம் சார்ந்து அன்பை போதிக்கும் கருத்துக்களை அவர்கள் முன்வைக்க வேண்டும். சிங்கள மக்கள் இந்த விடயத்தில் ஏமாறக் கூடாது. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு சமஷ்டிக் கொள்கையில் உறுதியுடன் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அந்த நம்பிக்கை தளர்ந்து போயிருக்கிறது.
தனி நாட்டிற்காக போராடிய நாங்கள் சமஷ்டிக் கொள்கையின் அடிப்படையிலாவது எங்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.
அந்தவகையில், விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையானது யாழ். தேர்தல் தொகுதியில் கூடார சின்னத்தில் போட்டியிடுகின்றது. மக்கள் எம்மை ஆதரிப்பார்கள் என்று நம்புகின்றோம். போராளிகளையும் பொதுமக்களையும் ஒற்றுமைப்படுத்திப் பயணிக்கவேண்டிய நிலையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்” என்றார்.