தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் மத்தியில் உள்ள பிளவுகளும் முரண்பாடுகளும் கூட, ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதாகத்தான் உள்ளது.
வடக்கு, கிழக்கில் இதுவரை காலமும் கோலோச்சி வந்த தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் வலுவான நிலைக்கு, இந்தப் பொதுத் தேர்தல், ‘சாவுமணி’ அடித்து விடுமோ என்ற கலக்கம், தமிழ் மக்கள் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுடன், சுயேட்சையாகப் போட்டியிடும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் போன்றனவே, இப்போது தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதில், கவனம் செலுத்தக் கூடியனவாக உள்ளன.
இத்தகைய கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்க்கும் முயற்சிகள், தோல்வி கண்ட பின்னர், தேர்தலில் தனித்தனியாகக் களமிறங்குகின்றன.
இந்தக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள், பிளவுகளாக மாறி, தனித்தனியாகப் போட்டியிடுவது, தவிர்க்க முடியாத விடயமாக மாறிவிட்டது.
ஒவ்வொரு தரப்பும் கூறும் நியாயங்களில் மறுக்க முடியாத பல உண்மைகளும் உள்ளன. இந்தத் தரப்புகளை ஒன்றிணைப்பதில் உள்ள முக்கியமான சவால் அது தான். அதனால்தான், அத்தகைய முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயின.
இப்போது, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள், போட்டிக் களத்துக்கு வந்து விட்டன. எனவே, ஒரு கை பார்த்து விடலாம் என்று, முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலானது, பேரினவாத கட்சிகளும் சலுகைகளை நீட்டி, மக்களை இழுக்கும் சந்தர்ப்பவாதக் கட்சிகளும் தான், ஆதாயம் பெறக் கூடிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், தமக்குள் அடித்துக் கொள்ளும் நிலையும் சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளும் தமிழ்த் தேசிய அரசியலின் மீது, தமிழ் மக்களை வெறுப்படையச் செய்யும் நிலையை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதை, இந்தக் கட்சிகள் உணருவதாகத் தெரியவில்லை.
இன்றுள்ள சூழலில், வாக்காளர்களுக்குப் பல தெரிவுகள் இருக்கின்றன என்பதை, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் மறந்து போயிருக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, மிகப் பெரியளவிலான மக்கள் வாக்களித்தனர் என்பதற்காக, அவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசிய அரசியலின் பக்கம் நிற்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.
தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்துக் கைப்பற்றுவதற்கு, பேரினவாதக் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்திருக்கின்றன.
அதில் ஒன்று, தமிழ்த் தேசிய வாக்குகளைச் சிதைத்தல். ஏற்கெனவே, தமிழ்த் தேசிய வாக்குகள், குறைந்தது நான்காக பிளவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனை மேலும் பல வழிகளில் சிதைக்கவே, ஏராளம் சுயேட்சைக் குழுக்களும் கட்சிகளும் களமிறக்கப்பட்டுள்ளன.
இந்த கட்சிகளும் சுயேச்சைகளும் வாக்காளர்களைப் பிரதேசவாதம், சாதியவாதம் போன்ற குறுகிய நோக்கங்களை முன்வைத்துப் பிரசாரம் செய்ய முனைவது, தமிழ்த் தேசியத்தின் பலத்தை மேலும் சிதைத்து வருகிறது.
பொருளாதார ரீதியாகப் பலவீனமான நிலையில் உள்ள மக்களையே, பேரினவாதக் கட்சிகளும் சமூக, பிரதேசவாதக் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இலக்கு வைக்கின்றன.
சமத்துவம் பேசுகின்ற கட்சிகளும் கூட, தமக்கென ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு தான், பிரசாரம் செய்ய முனைகின்றன. சமூக விடுதலை, சமத்துவம் என்பனவற்றை வலியுறுத்தும் கட்சிகள் ஏன் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் தம்மை அடைத்துக் கொள்ள முனைகின்றன என்பது, சிந்திக்க வேண்டிய விடயம்.
பிரதேசவாதத்தை முன்னிலைப்படுத்தும் கட்சிகள், குழுக்களின் நிலையும் அவ்வாறு தான் உள்ளன. இந்தத் தரப்புகளால் ஓர் ஆசனத்தையேனும் பெறக் கூடிய சூழல் இல்லை. ஆனாலும், வீம்புக்குப் போட்டியிட்டு மக்களைப் பிளவுபடுத்துகின்றன.
இந்தப் பிளவுபடுத்தலால் ஆதாயமடையப் போவது, விளிம்பு நிலையில் உள்ள பேரினவாதமும் அதற்குத் துணை போகின்ற கட்சிகளும்தான். இந்தக் கட்சிகள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு, சலுகைகளை நீட்டி, தமிழ்த் தேசிய வாக்குகளைச் சிதைக்க முனைகின்றன.
தமிழ்த் தேசிய வாக்காளர்கள் பலர், இவர்களின் பின்னால் திரும்புவதற்கு, தனியே அவர்களை நோக்கி வீசப்படும் சலுகைகள் மாத்திரம் காரணமல்ல.
தமிழ்த் தேசிய கட்சிகள், தமக்குள் போடுகின்ற சண்டைகளும் அதனால் ஏற்பட்டுள்ள வெறுப்பும் கூட, ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
உதாரணத்துக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இயலாமைகள் குறித்து செய்யப்படும் மிகையான பிரசாரங்களைக் குறிப்பிடலாம்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடக்காமல் போனதற்கு, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் போனதற்கு, அரசியல் தீர்வு கிட்டாமல் போனதற்கு, காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் போனதற்கு என்று எல்லாப் பிரச்சினைகளுக்கும் கூட்டமைப்புத் தான் காரணம் என்று, ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள் காரணம் காட்டுகின்றன. ஆனால் உண்மை நிலை அதற்கு மாறானது.
எந்தவொரு சிங்கள அரசாங்கத்திடம் இருந்தும் தமிழர் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வைப் பெற முடியாது என்பதே உண்மை.
சர்வதேச விசாரணையும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் தமிழர் தரப்பையும் தாண்டிய விவகாரம் என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்தல், இந்த யுகத்தில் நடக்கக் கூடிய ஒன்று அல்ல. அதற்குப் பதில் தேடுவது தான் நடக்கக் கூடியது.
இதையெல்லாம் தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் நன்றாகவே அறியும். ஆனாலும் கூட்டமைப்பை குற்றம்சாட்டுகின்றன.
இது கூட்டமைப்பிடம் உள்ள வாக்குகளையும் ஆசனங்களையும் கைப்பற்றுவதற்காகச் செய்யப்படும் பிரசாரமே ஆகும்.
குறுகிய நலனுக்காகச் செய்யப்படும் இந்தப் பிரசாரத்துக்கு, கூட்டமைப்பு மாத்திரம் பலியாகவில்லை. தமிழ்த் தேசிய வாக்காளர்களின் பலமும் தான் பலியிடப்படுகிறது.
தமிழ் தேசிய கட்சிகளால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று வாக்காளர்கள் சலுகையின் பக்கமோ, பிரதேசவாதிகளின் பக்கமோ, சாதிய அரசியலின் பக்கமோ நகர்ந்து விடக் கூடிய ஆபத்து உள்ளது.
இந்த உண்மையைத் தமிழ்த் தேசிய கட்சிகள் உணராமல் இருப்பது தான் பலராலும் வேதனையுடன் சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழ் தேசிய கட்சிகள், தமது கடப்பாட்டை உணரவும் இல்லை; உணரப் போவதும் இல்லை.
இந்தநிலை தான், தமிழ்த் தேசிய வாக்காளர்கள் வேறொரு பக்கம் திரும்ப முனைவதற்கு காரணம். தமக்குள் முரண்பட்டுக் கொள்ளும் தமிழ்த் தேசிய கட்சிகள், வாக்காளர்கள் சலுகையின் பக்கம் திரும்பிய பின்னர், அவர்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.
தமிழ்த் தேசிய கட்சிகள் மத்தியில் ‘கொம்பு சீவி விட்டு’ வேடிக்கை பார்ப்பவர்களும் அவற்றின் பின்னால் இருந்து இயக்குபவர்களும் தனக்கு மூக்குப் போனாலும் சரி எதிரிக்கு சகுனப் பிழையாகி விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
எமது மூக்கை இழந்து தான் எதிரிக்கு சகுனப் பிழையை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்கும் அளவுக்கு, தமிழ்த் தேசிய கட்சிகள் கீழ் இறங்கிப் போகும் போது, வாக்காளர்கள் தமது குறுகிய நலன்களுக்காகத் திசை திரும்புவதைக் குற்றம் கூறும் அருகதை அவர்களுக்கு இல்லாமல் போய் விடும்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் இதைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகாவது, புரிந்து கொள்ளுமா?