அவுஸ்ரேலியாவில் இலங்கை அகதி எடுத்த விபரீத முடிவு ரயில் முன்பாய்ந்து தற்கொலை
24 Jul,2020
அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி போராடிவந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சேர்ந்த 36 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞர், படகு ஊடாக சட்டரீதியற்ற முறையில் அவுஸ்ரேலியாவுக்கு சென்று, தஞ்சம் கோரி போராடி வந்துள்ளதாகவும் 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்துவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இவரது, அகதி தஞ்சக் கோரிக்கையை, குடிவரவுத் திணைக்களமும் மீளாய்வு மையமும் நிராகரித்தமையினால் அவர், நீதிமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், சிட்னி- பிளக்டவுன் (Blacktown) பகுதியில் ரயில்முன் பாய்ந்து சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தற்போது அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.